‘சிவாஜிக்கு அரசு ஏன் மணிமண்டபம் கட்ட வேண்டும்… அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே!’

sivaji-ganesanமறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தை கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருவதாக சிவாஜி சமூக நலப்பேரவை குற்றம்சாட்டி, உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுதான் இலவசமாக நிலம் கொடுத்துவிட்டதே. மணிமண்டபத்தையும் அரசே கட்ட வேண்டுமா… அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே, என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நடிகர் திலகம் சிவாஜி மறைவுக்கு பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தமிழக அரசு அடையாறு சத்தியா ஸ்டியோ எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது. அரசு இலவசமாக அளித்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி இதுகுறித்து பேசுவார்கள்.

ஆனால் நடவடிக்கை எதுவும் இருக்காது. மணிமண்டபம் வரும் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இதன் பின்னர் நடிகர் சங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து எந்த பணியும் நடைபெறவில்லை. தொடர்ந்து நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. தன்னுடைய கலைத்திறனால் நடிப்பாற்றலால் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கமோ தனிப்பட்ட அமைப்போ மணிமண்டபம் அமைப்பதைவிட தமிழக அரசே அமைப்பது அவருக்கு பெருமைசேர்ப்பதாக அமையும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும், நடிகர்களையும் அழைத்துள்ளோம்,” என்றார். கடும் எதிர்ப்பு இந்த கோரிக்கை மற்றும் உண்ணாவிரத அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“ஏன் இதை அரசு கட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இடத்தைக் கேட்டு வாங்கிய நடிகர் சங்கமே கட்டுவதுதானே முறை? நடிகர் சங்கத்தை எதிர்த்தல்லவா இவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாவிட்டால், நல்ல செழிப்பான நிலையில் உள்ள சிவாஜி குடும்பமே இதைக் கட்டலாமே? சிவாஜியின் பேரன் இப்போது பல கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகர்தானே?”, என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்து வருகிறது.

tamil.filmibeat.com