‘இனி பெரிய நடிகர்கள் படம் தோற்றால் ஹீரோக்கள் 20 சதவீத சம்பளத்தை திருப்பித் தரணும்!’

sarath-kumar‘இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களின் படங்கள் தோல்வியைத் தழுவினால் அவர்களின் சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும்’. -இப்படி ஒரு முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரகசியமாக எடுத்திருக்கிறது.

அதற்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு விஷயத்தை வெளியில் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள். வரும் ஜூலா 24-ம் தேதிக்குப் பிறகு இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.

இதன்படி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர்கள் பெற்ற சம்பளத்தில் 20 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவேண்டும். இந்த முடிவு மிகவும் அபாயகரமானது என தயாரிப்பாளர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டை தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் செய்யும் வேலை இது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

ஒரு முன்னணி ஹீரோவின் படம் தோற்றால், அவர் தர வேண்டிய ’20 சதவீதப் பணத்தைத் தர வேண்டாம், கால்ஷீட் கொடுங்கள் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து பணம் பார்க்கவே அந்தத் தயாரிப்பாளர் முனைவார்.

அதற்கு தோதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நடிகர் சங்கமும் துணை போகிறது என்கிறார்கள். இந்த முடிவுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எப்படிச் சம்மதித்தார்? யாரிடம் ஆலோசனை செய்தார்? என்று நடிகர்கள் தரப்பு கொதித்துப் போயுள்ளது. ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு பரபர காட்சிகள் அரங்கேறும் எனத் தெரிகிறது.

tamil.filmibeat.com