மதன் கார்க்கி… வைரமுத்துவின் மகன்.. இல்லை, இல்லை… “கோடி”களின் பிதாமகன்!

madhan-karkyசென்னை: மதன் கார்க்கி.. வைரமுத்துவின் என்ற அடையாளம் மாறி இப்போது மதன் கார்க்கியின் தலை மீது மெல்ல மெல்ல ஒரு புதுப் பெருமையும், பெருமிதமும் வந்து அமர்ந்திருக்கிறது. இனியும் இவரை வைரமுத்துவின் மகன் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. மதன் கார்த்தியின் தனித்துவம், சாதனைகளின் அங்கம் என அவர் புதிய அடையாளமாக வியாபித்து எழுந்து நிற்கிறார். தற்போது மதன் கார்க்கிக்கு புதிய பெருமை ஒன்று கிடைத்துள்ளது. பலருக்கும் இப்படிப்பட்ட பெருமைகள் கிடைப்பது என்பது அரிதானது. அதை விட அரிதானது பெரும் பெரும் சாதனைகள் படைத்த குழுவுடன் இவரது பெயரும் இணைந்திருப்பது.

மதன் கார்க்கி பாடலாசிரியர் மட்டுமல்ல, சாப்ட்வேர் என்ஜீனியர், ரோபோட்டிக்ஸில் நல்லறிவு பெற்றவர், மொழியியலாளர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என பல முகம் கொண்டவர் மதன் கார்க்கி.

தென்னிந்தியத் திரையுலகின் ஜாம்பவான் படங்களில் முக்கியப் பங்காற்றிய பெருமை மதனுக்குக் கிடைத்துள்ளது. அவை இவைதான் – எந்திரன், கத்தி, துப்பாக்கி, ஐ, பாகுபலி ஆகியவையே.

இந்த படங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. ஆம் அத்தனையும் 100 கோடிகளைத் தாண்டி வசூல் ஈட்டிய படங்கள். இதில் முதலில் எந்திரன் பெரும் வரலாறு படைத்தது. அதை பாகுபலி வந்து முறியடித்துள்ளது.

இந்தப் படங்களுக்கும் கார்க்கிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஆம், அனைத்துப் படங்களிலும் கார்க்கி முக்கியப் பங்காற்றியுள்ளார். எந்திரன் படத்தில் இவரது பங்கு மகத்தானது. எந்திரன் படத்தின் வசனத்தில் ஷங்கருக்கு பேருதவி புரிந்தார். ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் குறி்த்து ஷங்கருக்கு உதவினார்.

துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பாடலை எழுதி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதேபோல கத்தி படத்தில் வந்த செல்பி புள்ள பாடலும் இவருடையதே.

ஐ படத்தில் அய்லா அய்லா பாடல் இவருடையது. இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் இரு பொருள் படும் படியாக வந்திருக்கும்.

பாகுபலி படத்தில் மதன் கார்க்கியின் பங்கு மகத்தானது. அந்தப் படத்தில் வரும் கிளிக்கி என்ற பாஷையை உருவாக்கிய பிதாமகன் இவர்தான். தமிழ் பதிப்பின் வசனத்தை எழுதியவரும் இவரே. தமிழிலும், தெலுங்கிலும் வந்த 100 கோடிப் படங்களில் மதன் கார்க்கியின் பெயரும் முக்கியமான அங்கமாக இணைந்திருப்பது நிச்சயம் அவருக்கு பெருமைதான்.