கம்ப்யூட்டர் இசையை தூக்கி எறியுங்கள்: இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

1352977934_9d771de5ff617eb5214592b19ec3b33d_Lஇசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரத்யேகமாக இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசை கச்சேரி நடந்தது.

மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்’ உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இளையராஜா பேசியதாவது:–

உலக மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன், என் இளமை காலம் அவர் பாடல்களோடு தான் கழிந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்று தெரியாத பருவத்தில் அவரது பாடல்களில் ஈர்க்கப்பட்டேன்.

“உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்” என்ற பாடலை தந்தார். ‘குலே பகாவலி’ படத்தில் போட்ட “மயக்கும் மாலை பொழுதே நீ போபோ” பாட்டை இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு போட முடியாது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டமாக அது இருந்தது. அந்த காலத்து பாடல்களை இப்போதும் பாடலாம். ஆனால் இன்றைய பாடல்களை பாட முடியாது.

இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் இசையை பயன்படுத்தாதீர்கள், தூக்கி எறியுங்கள். மூளையை பயன்படுத்துங்கள். “மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி” என்ற அற்புதமான பாடலை கொடுத்தார்.

மனது தளர்ந்து போய் இருப்பவர்களுக்கு தெம்பு ஊட்ட “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா.” “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்…” “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்ற பாடலை தந்தார். கஷ்டப்படும் போது எனக்கு நம்பிக்கை ஊட்டும் பாடலாக இது இருந்தது என்று கவிஞர் வாலி என்னிடம் சொல்லி இருக்கிறார்.

“மாடிமேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே”, “பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது”, “நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை”, “நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை” போன்ற அற்புதமான பாடல்களை கொடுத்தார்.

தனா, தனா, தனா என்ற சந்தத்தை மட்டுமே பயன்படுத்தி “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” பாடலை கொடுத்தார். அவர் இசையில் ஒழுக்கம் இருந்தது. இப்போதைய இசையில் ஒழுக்கம் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது.

இவ்வாறு இளையராஜா பேசினார்.

-http://tamilcinema.news