உலகிலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள்! – இளையராஜா

Ilayaraja Latest Stillsசென்னை: உலகத்திலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எனக்கென்று தனி இணையதளம், யுட்யூப் சேனல் தொடங்குகிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து திரையிசையில் உலக சாதனைப் படைத்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் சாகா வரம் பெற்றுத் திகழ்கின்றன. இன்றும் அதிக அளவில் கேட்கப்படும் பாடல்களும் இவரதுதான்.

தற்போது ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் 1000ஆவது படத்திற்கு இசையமைத்து வரும் இவர், தனது படைப்புகளுக்கு உரிய உரிமத் தொகையைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். அனுமதியில்லாமல் தன் பாடல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இளையராஜாவிடம் உரிய அனுமதி பெற்று பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளன பண்பலை வானொலி உள்ளிட்ட அமைப்புகள்.

இந்த நிலையில் இணையதளங்களில் இளையராஜாவின் இசை, பாடல்களை மையப்படுத்தி ஏராளமான இணைய தளங்கள், வலைப்பூக்கள் மற்றும் யு ட்யூப் சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக யு ட்யூபில் ராஜாவின் பாடல்களை ஒரு ஆர்வத்தில் ரசிகர்கள் பதிவேற்றி வைக்க, அதை வைத்து வேறு யார் யாரோ முகம் தெரியாத நபர்கள் காப்பிரைட் என்று கூறி சம்பாதித்து வருகிறார்கள். பதிவேற்றிய ரசிகருக்கு வெறும் கமெண்டும் லைக்கும்தான் அதில் மிச்சம்.

இவற்றை முறைப்படுத்த இப்போது இளையராஜா முனைந்துள்ளார். இது குறித்து இளையராஜா கூறும்போது, “இதுவரைக்கும் இணைய தளங்களில் என்னுடைய பெயரில் பல்வேறு வெப்சைட் பக்கங்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவை அனைத்தும் என் கவனத்திற்கு வராமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்பட்டு வருகின்றன என்பதோடு, இந்த பக்கங்கள் மூலம் என்னுடைய ரசிகர்களை தவறாக திசை திருப்பும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தடுக்கும் நோக்கத்துடன் ஒரு இணைய பக்கத்தை www.ilaiyaraajalive.com பெயரில் இன்றிலிருந்து தொடங்கி இருக்கிறேன். இதேபோல், யூடியூப் சேனல் www.youtube.com/ilaiyaraaja official வழியாக என்னுடைய அரிய வீடியோ இணைப்புகளை நீங்கள் காணலாம். இனிமேல் என் அதிகாரப்பூர்வமான சேனல்கள் இவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

tamil.filmibeat.com