இளையராஜா பாடல்கள்: தனியார் நிறுவனங்கள் மீதான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ilayaraja1சென்னை: தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது பாடல்களை எந்தவித உரிமையும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன, இதனைத் தடை செய்ய வேண்டும் என்ற ரீதியில் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். சில தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார், இதில் இசைஞானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் உள்ள தலைசிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.

இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன், இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன்.

நான் இசையமைத்த திரைப்படம் மற்றும் பக்தி பாடல்களை ஒலிப்பரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால், அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3-வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும், என்று அந்த மனுவில் இளையராஜா கூறியிருந்தார்.

இளையராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட மேலே சொன்ன 5 நிறுவனங்களுக்கும் நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை எதிர்த்து அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்க கோரிய தனியார் நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.