இலங்கையில் 2 ஆயிரம் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டது, அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததா? -ராஜ்கிரண்

rajkiranநவீன்சந்திரா, ரூபா மஞ்ஜரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. சத்யசிவா இயக்கம். முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது ராஜ்கிரண் பேசியது:

இலங்கை போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது இனப்படுகொலை. இந்த சோகத்தை தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் மீடியாவில் வெளிவராதவண்ணம் இந்திய வெளியுறவு துறை தடுத்துவிட்டது. பாரதிய ஜனதா அரசு இந்துத்வா பற்றி பேசுகிறது. இலங்கையில் 2 ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததா? அதற்கு மாறாக ராஜபக்சேவுக்கு திருப்பதி கோயிலுக்கு வந்து செல்ல சிவப்பு கம்பளம் விரித்தது.

தமிழ் இனம் வருங்காலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக சிங்களர்களைவிட்டு தமிழ் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இங்கு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவரை அடித்து கொல்கின்றனர். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை கேட்க மறுக்கின்றனர்.

வறுமையில் பெண்கள் சிலர் விபசாரம் செய்கின்றனர். இந்த கொடுமையை எல்லாம் படத்தில் காட்டக்கூடாது என்று தடை உள்ளது. ஆனால் இதையெல்லாம் உணர்த்தும் விதமாக சிவப்பு படம் உருவாகி உள்ளது. இவ்வாறு ராஜ்கிரண் உணர்ச்சி வசப்பட்டு பேசியபோது கதறி அழுதார். பிறகு அவரிடம், ‘அரசியல்பற்றி விமர்சிக்கிறீர்களே நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்றதற்கு, ‘எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது’ என்றார்.

– cinema.dinakaran.com