நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம்: நாசர் வலியுறுத்தல்

நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம் என்று தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர் நாசர் வலியுறுத்தினார்.

தமிழ் நாடகத் தந்தையாக மதிக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 93-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காலையில் ஊர்வலம் தொடங்கியது. நாடக, கூத்துக் கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் உதயா, பூச்சி முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதியில் கருவடிக்குப்பம் மயானத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மண்டபத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நாசர் பேசியதாவது:

நாடக கலைஞர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பது வருந்தத்தக்கது. ஆனால், நாடகக் கலைஞர்களுக்கு உள்ள மனத்தெளிவு, மன தைரியம் திரைப்பட நடிகர்களுக்கு இல்லை. பெரும் பயத்தில் வாழ்பவர்கள் அவர்கள். நாடகக் கலைஞர்களுக்கு எல்லாமே தூசுதான்.

நாடகக் கலை தற்போது தமிழ் சமூகத்தில் வெறும் சடங்காக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது. நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம். எவரையும் சார்ந்து இருக்காமல், அவர்களே தங்களை முன்னேற்றும் வகையில், நாடகக் கலையை முன்னேற்றுவதே எங்கள் விருப்பம். அதற்கு மக்களும் கைக்கொடுப்பது அவசியம்.

நாடகத்தினை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். லண்டன், பிரான்ஸ் நாடுகளில் நாடகங்களுக்கு தற்போதும் நல்ல வரவேற்பு உள்ளது.

பாரம்பரிய நாடகக் கலைஞர்களுக்கு புகலிடமாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருக்கும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சங்கரதாஸ் சுவாமி நிகழ்கலைப் பள்ளியின் பெயரை மாற்றக் கூடாது. அப்படியே தொடர வேண்டும் என்றார் நாசர்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் ரா.விசுவநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாரா. கலைநாதன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் பூ. ராகிணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-http://www.dinamani.com