யோகா எனும் சமஸ்கிருத சொல்லின் தமிழாக்கமே ஓகம் எனும் தமிழ்ச்சொல்.
யோகக் கலையின் வரலாற்றை அரிய முற்படும்போது ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட வரலாறு கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மை.
இருப்பினும் பல ஆய்வாளர்களின் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகக் கலையின் வரலாற்றை ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கொள்ளலாம்.
முற்காலத்தில் இந்த யோகக் கலையை இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த முனிவர்களும் யோகியர்களும் பின்பற்றி வந்ததோடு தம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தனர். மிக உயரிய யோக இரகசியங்களைத் தங்களின் முதன்மை மாணவர்களுக்கும் மிக நம்பிக்கைக்குறிய மாணவர்களுக்கு மட்டுமே கற்பித்து வந்தனர். ஆகையால் இக்கலையை எளிய மாந்தர்கள் கற்கவோ அறிந்திருக்கவோ வாய்ப்பில்லாமல் போனது.
தொடக்கக்காலத்தில் யோகக் கலைக்கு ஒரு தெளிவான வரையறையோ சட்டங்களோ இல்லாதிருந்தது. ஒவ்வொரு குருமாரும் தங்களுக்கென தனி நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றி தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தனர். இதற்கான சாத்திரங்களோ, சூத்திரங்களோ நூல்களோ அக்காலத்தில் இல்லை. இக்கலை வெறும் செவிவழி, செயல்வழி அறிவாகவே குருவானவர் தன் மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
கி.மு. 2-ம் நூற்றாண்டில் பதஞ்சலி முனிவர் என்பவரே சிதறி கிடந்த இந்த யோகக் கலையை ஒன்றுதிரட்டி ஒருங்கிணைத்து யோக சூத்திரங்கள் எனும் யோகக் கலை நூலை தொகுத்ததோடு மஹாபாஷியம் எனும் இராஜயோகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளையும் உள்ளடக்கிய நூலையும் எழுதினார். அதன் பின்பும் இக்கலை ஒரு குறிப்பிட்ட சாரரால் மட்டுமே பின்பற்றப்பட்டது.
மிகவும் பிற்காலத்தில் அதாவது 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே இந்த யோகக் கலையை வெளிப்படையாகப் பொதுமக்களுக்கு பயிற்றுவிக்கப்படும் நிலை உருவானது.
-ஓகிமுகில்