”திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்”

simbu_001சென்னை: திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிம்பு, அனிருத் பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் இருவர் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூரை சேர்ந்த பாலம்பாள் (வயது 60) சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

பாலம்பாள் தனது மனுவில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.நடிகர் சிம்பு பாடிய ‘பீப்’ என்று ஆபாச பாடல் வெளியானது குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, ‘பீப்’ ஓசை மூலம் மறைக்கப்பட்ட வார்த்தை என்ன? என்பதை தெளிவாக குறிப்பிடாமலும், யார்? எந்த ஊரில் வைத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் இல்லாமலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிம்பு மீது வழக்குப்பதிவு செய்ய வேகம் காட்டியதுபோல, ஊடகங்கள், திரைபடங்களில் பெண்களை அசிங்கமாகவும், அவதூறாகவும் பாடல் வரிகளில், வசனங்களில், காட்சிகளில் சித்தரிக்கப்படும்போது, வேகமாக போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையிலேயே பெண்களை ஆபாசமாக சித்தரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் நினைத்தால், பீப் பாடல்களுக்காக சிம்பு, அனிருத் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ததுபோல, பெண்களை எந்த வடிவில் ஆபாசமாக சித்தரித்தாலும் அதன்மீது வழக்குகளை பதிவு செய்யவேண்டும்.

எனவே, டி.வி., சேனல்கள், திரைபடங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் வரிகள், பாடல் நடனக்காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும். இதுதொடர்பாக 26-ந்தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் பாலாம்பாள் கூறியிருக்கிறார்.

பாலம்பாள் தொடுத்துள்ள இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களை எச்சரிக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com