இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படம் என்கிற சிறப்புடன் பொங்கல் திருநாளில் திரைகளைத் தட்ட வருகிறது பாலா இயக்கியுள்ள ‘தாரை தப்பட்டை’. நான்கே நாட்களில் அத்தனை பாடல்களையும் இசைச்சேர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு செய்து முடித்திருக்கிறார் ராஜா. இனி அவற்றைக் காலம்பூராவும் கேட்டு ரசிப்பது திரையிசை ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு. நாதஸ்வரம், தவில், பறை, கொம்பு, கடம், வீணை, வயலின், புல்லாங்குழல் என தமிழர் இசைக்கருவிகளால் ராக ராஜாங்கம் செய்திருக்கிறார் ராகதேவன்.
நாயகன் அறிமுகத்துக்கான தீம் மியூசிக்கை கேட்கும்போது, கிராமத்து திருவிழாவில் கருப்பசாமி ஆடும் அதகள ஆட்டம் நினைவுக்கு வருகிறது.
‘தாரை தப்பட்டை’க்கான தீம் மியூசிக் நவரச உணர்வுகளையும் காதுகளுக்குள் நுழைத்து, கருத்துக்குள் ஏற்றுகிறது.
சத்யபிரகாஷ், சுர்முகி பாடியுள்ள ‘பாருருவாயா! பிறப்பற வேண்டும்…’ திருவாசகப் பாடலைக் கேட்டால், வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வடிகால் கிடைக்கப்பெறுவார்கள்.
ஷரத் பாடியிருக்கும் ‘இடறினும்…’ பாடல், இளையராஜாவின் தன்னிலை விளக்கம்போல மலர்ந்து, இதயத்தைப் பிசைந்து, இடம்பெயர மறுக்கிறது. ‘சிறிதே இசைத்தாலும் மருந்தாகும், வாழ்வென்ன இசையென்ன எனக்கு ஒன்றாகும்…’ என்று தத்துவம் பேசுகிறது அந்தப்பாடல்.
எம்.எம்.மானஸி, பிரசன்னா குரல்களில் பரவும் ‘ஆட்டக்காரி மாமன் பொண்ணு…’ பாடல், இன்னொரு ‘மாங்குயிலே பூங்குயிலே…’வாக மனதை வருடுகிறது.
தகிட தகிட என விரைவு வண்டியின் வேகம் பிடிக்கும் ‘வதன வதன வடி வடிவேலனே…’ என்கிற துள்ளல் பாடலை கவிதா கோபியும் பிரியதர்ஷினியும் கிறங்க வைக்கும் குரல்களால் நம்மை கிக்க வைக்கிறார்கள்.
அனந்து மற்றும் குழு பாடியுள்ள ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே…’ பாடல் பாலா படத்துக்கே உரிய சிறப்பான மறு ஆக்கம்.
இசைச்சேர்ப்பின்போது நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இளையராஜா. ‘மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும்’ என்கிறோமே, அது ‘தாரை தப்பட்டை’ பாடல்களுக்கு முழுமையாகப் பொருந்தும்.
– cinema.dinakaran.com
தூள் கிளப்பட்டும்! நமது பாரம்பரியத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!