இறுதிச்சுற்று – ஒரு பார்வை!

படம் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின் மனதில் மகிழ்ச்சி, துன்பம், கோபம் போன்ற உணர்வுகளை சிறு அதிர்வுடன் உணரவைக்கும் படைப்புக்கள் என்றும் மறக்கப்படுவதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று, பாக்சிங் வகையான படங்களில் என்றும் மறக்கமுடியாத படமாக இருக்கும். மேலும் முதல் இடத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விளையாட்டில் புகுந்த அரசியலால் தோற்கடிக்கப்பட்ட பாக்ஸிங் வீரர் பிரபு(மாதவன்). ஒரு கண்ணாக நினைத்த பாக்ஸிங் தோல்வியடைய, இன்னொரு கண்ணான அவரது மனைவியும் இன்னொரு பாக்ஸிங் வீரருடன் ஓடிவிடுகிறார். இருந்தாலும் பாக்ஸிங்கை விடமுடியாமல், பயிற்சியாளராக வாழ்க்கையை தொடர்கிறார். மொத்த வாழ்க்கையும் சூனியமாகிவிட, எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் எதன் மீதும் எல்லோர் மீதும் வெறுப்புடன் இருக்கும் பிரபு, மீண்டும் பாக்ஸிங் அரசியலில் சிக்கி சென்னைக்கு தூக்கி எறியப்படுகிறார். சென்னை பாக்ஸிங் அசோசியேஷனின் ஜூனியர் பயிற்சியாளர் நாசரும், பிரபுவிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறார். ’இங்க பாக்ஸிங் கத்துக்க யாரும் வரல. கவர்ன்மெண்ட் வேலைக்காக பாக்ஸிங் விளையாட்றாங்க’ என தனது கோபத்தின் காரணத்தையும் சொல்கிறார்.

வேண்டா வெறுப்பாக சென்னை அசோசியேஷனில் சேரும் பிரபு, நாசரின் ஸ்டார் பிளேயர் லக்ஸின் தங்கை மதியை பார்க்கிறார். அக்கா பயிற்சி எடுக்க உதவியபோதும், பாக்ஸிங் வீரர் முகமது அலியின் சண்டைகளை பார்த்து வளர்ந்ததாலும் மதியின் பாக்ஸிங் ஸ்டைல் அபரிவிதமாக இருப்பதை உணர்கிறார் பிரபு. ‘இவ கண்டிப்பா பெரிய பாக்ஸரா வருவா’ என முடிவெடுத்து மதிக்கு பயிற்சி கொடுக்க துவங்குகிறார். மாஸ்டரின் முரட்டு குணம் பிடிக்காத ஸ்டூடண்ட், தங்கையின் வளர்ச்சி பிடிக்காத அக்காவின் சூழ்ச்சி, திறமைகளை பார்க்காமல் உடலைப் பார்த்து செலக்‌ஷன் செய்யும் கமிட்டி தலைவர் என பல பிரச்சனைகளைத் தாண்டி மதி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பது மிரட்டல் க்ளைமாக்ஸ்.

 

படம் துவங்கும்போது மோசமானவனாக தெரியும் மாதவன் கேரக்டர் படம் முடியும்போது ஒரு மரியாதக்குரியவராக தெரிவது, அந்த கதாபாத்திரத்தை மாதவன் எந்த அளவிற்கு கையாண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி. எனது இன்றைய நிலைக்கு காரணம், இந்த சமுதாயம் எனவே எனது மூர்க்கத்தனத்தை இந்த சமுதாயம் பொறுத்துப் போகத்தான் வேண்டும் என்றது போன்ற மாதவனின் கதாபாத்திர வடிவமைப்பு கச்சிதம். மாதவன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது இப்படி ஒரு வெற்றிக்காகத் தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். மேடி என்ற சாக்லேட் பாய், பிரபு என்ற ஜனரஞ்சக மனிதனாக இறுதிச்சுற்றில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

ரிதிகா மதி கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். மாதவனைப் பழிவாங்க வேண்டுமென்றே தோற்றுப்போய் நிற்கும் காட்சியில் மிகப்பெரிய வில்லியாகவும், மாதவனை புரிந்துகொண்டு ‘உனக்கு என்ன வேணும் மாஸ்டர்’ என கேட்கும் காட்சியில் மிகப்பெரிய ஹீரோவாகவும் தெரிகிறார். ரிதிகாவின் கதாபாத்திரத்தில் ஒரு பாக்ஸிங் வீராங்கனையின் பிரதிபலிப்பை விட இயக்குனர் சுதா அவர்களின் பிரதிபலிப்பு அதிகம் தெரிவது, கதாபாத்திர வடிவமைப்பு இயக்குனரின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. இனி பாக்ஸிங் இல்லை, நடிப்பு தான் என ரிதிகா முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் தனி பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். ரித்விகாவின் காதல் காட்சிகளில் கவிதையாகவும், சண்டைக்காட்சிகளில் அதிரடியாகவும் படத்துடன் பயணம் செய்கிறது பிண்ணனி இசை. கடல்புறக் காட்சிகளில் இசையோடு சேர்ந்து வீசும் கடல்காற்று என ரசிகர்களை படத்துடன் கட்டிப்போடும் வேலையை சந்தோஷ் நாராயணன் சிறப்பாக செய்துவிடுகிறார். படத்தில் இருக்கும் குற்றம் குறைகளை கண்டுபிடிக்காமல் செய்கின்றன சீரான இடைவெளியில் வரும் ‘ஏய் சண்டக்காரா’ மற்றும் ’உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற’ பாடல்கள். இந்த பாடல்களை பாடியிருப்பது சந்தோஷ் நாராயணின் உறவுக்கார பெண் ’தீ’.

 

சுதா கொங்கரா இவ்வளவு ஜனரஞ்சகமாக ஒரு படைப்பை எடுத்ததற்காக பெரிய அளவிளான பாராட்டை பெறப்போவது உறுதி. உலக அளவில் பெண்களுக்கான பாக்ஸிங் அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் ஆனது எத்தனைப் பேருக்கு தெரியும் என்ற கேள்வி, நம்மைச் சுற்றி நடப்பதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் ஒவ்வொரு குடிமகனின் மீதும் வைக்கப்படும் கேள்வி. ரிதிகா இறுதிச்சுற்று முடிந்த பிறகு கமிட்டி தலைவனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு குத்தும், இவர்களை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது விழும் அடிகள்.

போட்டியில் செல்க்ட் ஆவதற்காக பாக்ஸிங் விளையாடும் பெண்கள், எந்த அளவிற்கும் இணங்குகிறார்கள் என்ற ரீதியில் காட்டியிருப்பதைப் பார்க்கும்போது, இனி பெண்களை பாக்ஸிங்கில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களை இது யோசிக்க வைக்காதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. விமர்சனங்கள் இருந்தாலும் இறுதிச்சுற்று அரசாங்கத்தின் மீதும் அதிகார வர்க்கத்தின்மீதும் விழுந்த பெரிய இடி.

இறுதிச் சுற்று – அதிரடி ஆட்டம்

-http://cinema.nakkheeran.in