விசாரணை

விசாரணை - Cineulagam

சமீப காலமாக நமது தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன. அதேபோல் வழக்கமான மசாலா படங்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக தமிழில் வித்தியாசமான, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நம்ம ஊர் “உலக சினிமாக்கள்” வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த வகையை சேர்ந்த, லாக்-அப் என்ற நாவலை மையப்படுத்தி, பல சர்வதேச விருதுகள் வாங்கிய ”விசாரணை” படத்தின் சிறப்பு விமர்சனம்.

கதை:

பிழைப்பிற்காக ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார் தினேஷ். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக தனது மூன்று நண்பர்களுடன் பூங்காவில் தங்கி வேலை பார்க்கிறார்.

அவர் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு திருட்டு நடக்க, அவ்வழக்கை விரைவில் முடிக்க, தினேஷ் மற்றும் நண்பர்கள் மூவரையும் கைது செய்து திருட்டை ஒப்புக்கொள்ளுமாரு சித்ரவதை செய்கிறது ஆந்திர காவல்துரை.

வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது சமுத்திரகனியின் உதவியால் நால்வரும் தப்பிக்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக இவர்களிடம் ’சுப்பிரமணியபுரம்’ பாணியில் ஒரு உதவி கேட்கிறார், அவர்களும் அந்த வேலை முடிந்தபின் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிக யதார்த்தமாகவும் மிகவும் விறுப்விறுப்பாக சொல்லும் படம் தான் ‘விசாரணை’.

படத்தை பற்றிய அலசல்:

குக்கூவில் கண் வலியை பொறுத்துக்கொண்டு நடித்த அட்டக்கத்தி தினேஷ் இதில் உடல் வலியை பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். திரையில் இவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிறது, இவர் பயப்படும் பொழுதெல்லாம் நமக்கு அச்சம் தொற்றிக்கொள்கிறது அந்த அளவிற்கு தன் நடிப்பின் மூலம் உணர்வுகளை கடத்துகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் வெறும் நகைச்சுவைக்கு மட்டும் பயன்படுத்தாமல் ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நம்மை அந்த அழுத்தமான காட்சிகளில் கூட சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சமீபகாலங்களில் ஒரு முக்கியமான கௌரவ வேடம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சமுத்திரகனியை புக் செய்யலாம். அந்த அளவிற்கு இப்படத்திலும் தன் மேம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி.

கொஞ்ச நேரம் மட்டும் வந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார் கிஷோர். தனது கண்களிலேயே மிரட்டி எடுக்கிறார் அஜய் கோஷ். கயல் ஆனந்தி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை காட்டிலும் ஒரு கேமியோ பண்ணியிருக்கிறார். ஆனால் அவரின் பாத்திரத்திற்கு நச் என பொருந்தியிருக்கிறார்.

அதட்டலாக பேசும் உயர் அதிகாரி வேடத்தில் மிரட்டலாக பொருந்தியுள்ளார் சரவண சுப்பையா. கண்டிப்பாக இப்படத்தில் நடித்தவர்களுக்கு பல விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.

இப்படத்தில் வித்தியாசமான கதையை கையாண்டுள்ளார்கள், யதார்த்தமாக படமாக்கியுள்ளார்கள் என்பதைத் தாண்டி நம் சமூகத்தின் உண்மை முகத்தை அரிதாரம் பூசி அலங்கரிக்காமல் அப்படியே காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். குறிப்பாக ஒரு காட்சியில் தமிழ் இஸ்லாமியர் ஒருவர் போலீஸுடம் மாட்டிக்கொள்ளும் போது அவரை எப்படி அந்த காவல்துரை அதிகாரி கேள்விக்கேட்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது நம் சமூகத்தின் கசப்பான உண்மை நிலை.

எதை செய்தாலும் ஒரு லாபம் எதிர்பார்க்கும் உயர் அதிகாரி, உணவளித்து பிரம்பெடுக்கும் ஆந்திர காவல்துரை அதிகாரி, தேனாக பேசி தேளாக கொட்டும் கொடூர எஸ்.ஐ என காவல்த்துறையை பற்றி நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல உண்மைகளை கையாண்ட வெற்றிமாறனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஒரு உண்மை சம்பவத்தையோ ஒரு நாவலையோ தழுவி எடுக்கும் பொழுது பல சவால்களை சந்திக்க நேரிட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதை நிரூபித்து விட்டார்.

வெற்றிமாறன்- ஜீ.வி பிரகாஷ் கூட்டணி இப்படத்திலும் கலக்கியுள்ளது. பின்னணியில் இவரின் இசை கதையை நகர பெரிதும் உதவியுள்ளது.

நம்மையே திரைக்குள் எடுத்து செல்கிறது ராம லிங்கத்தின் ஒளிப்பதிவு, அதிலும் பல சிங்கிள் ஷாட் காட்சிகளை இவர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. படத்தொகுப்பாளர் கிஷோரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என மீண்டும் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து வரும் தனுஷ் இதுபோன்ற பல படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

க்ளாப்ஸ் :

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள தயங்கும் படத்தின் கதைக்களத்தை மிக யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கிய விதம். படத்தில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் இயல்பான நடிப்பு. படத்தை விட்டு எந்த இடத்திலும் தனியாக தெரியாமல் படத்தை மேம்படுத்த மட்டுமே உதவிய தொழில்நுட்ப கலைஞர்கள்.

பல்ப்ஸ்:

படத்தின் முதல் பாதியில் இடம்பெற்ற காதல் காட்சிக்கு காரணம் இருந்தாலும் அது படத்தை எந்த வகையிலும் உதவவில்லை. அதேபோல் முதல்பாதியில் தெலுங்கில் பேசும் பல இடங்களில், நடிகர்களுக்கும் சப் டைட்டிலுக்கும் கண் அலைமோதுவது பார்வையாளருக்கு சிரமத்தை ஏற்படுத்திகிறது. சில இடங்களில் லிப்சிங்க் இல்லாமல் போனது ஆச்சர்யம்!

மொத்தத்தில் “விசாரணை” ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகரும் கட்டாயமாக பார்க்கவேண்டிய படம்.

-http://www.cineulagam.com