1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை: இளையராஜாவுக்கு 27-இல் பாராட்டு விழா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

1976-ஆம் ஆண்டு “அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்கு, அண்மையில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “தாரை தப்பட்டை’ ஆயிரமாவது படமாக அமைந்தது.

இதையொட்டி தாரை தப்பட்டை படக்குழுவினர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அப்போது, சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் இந்த விழாவை திட்டமிட்டப்படி நடத்தமுடியவில்லை.

இந்த நிலையில், சென்னையில் வரும் 27-ஆம் தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவை இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சி நடத்துகிறது. பிரம்மாண்டமான முறையில் நடக்கவுள்ள பாராட்டு விழாவில், இந்திய அளவிலான திரை பிரபலங்கள், இசைக் கலைஞர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், தமிழ்த் திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இளையராஜா, “என் இசைக்கு பாராட்டு என்பது, எனக்கு இசை ஞானத்தை கொடுத்த என் இறைவனுக்கான பாராட்டாகத்தான் இருக்கும் என்பதால் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com