ஹேராம் படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி இளையராஜாவின் இசை!- கமல்

heyram-600தான் இயக்கி நடித்த ஹேராம் படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சியே அந்தப் படத்துக்கு இளையராஜா அமைத்த இசைதான் என்று பெருமிதப்பட்டுள்ளார் கமல் ஹாஸன்.

கமல் இயக்கிய ஹேராம் படம், 2000-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைத்தளத்தில் #16YearsOfHeyRam என்கிற ஹேஸ்டேகில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

இதற்கடுத்ததாக கமல், தன் ட்விட்டர் பக்கத்தில் ஹேராம் பற்றி குறிப்பிட்டார். அதில் இளையராஜா இசை குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ட்விட்டரில் கமல் கூறியதாவது: ஹேராம் படத்தின் 16-வது ஆண்டை ரசிகர்கள் கொண்டாடுவதைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். இந்தப் படம் உருவாகக் காரணமான ஷாருக் கான், பரத் ஷா ஆகியோரை நினைவு கூர்கிறேன்.

ஹேராம் படத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி, இளையராஜாவின் இசை. ஹேராமின் இசையை தவறான கைகளிலிருந்து அவர்தான் காப்பாற்றினார். அப்பட இசை, ஒரு ஆராய்ச்சித் தன்மை கொண்டது,” என்றார்.

ஹேராம் படத்துக்கு முதலில் இசை அமைக்க ஒப்பந்தமானவர் எல் சுப்பிரமணியன். அவர் இப்படத்துக்காக முழுப் பாடல்களுக்கும் இசையமைத்து, காட்சிகளும் பதிவான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விலகினார். அந்த நிலையில் இளையராஜா இசையமைப்பாளராக பணியாற்றினார். எல் சுப்பிரமணியன் இசையமைத்த பாடல்களை ஒரு முறை கூட கேட்டிராத இளையராஜா, படமாக்கப்பட்ட காட்சிகளுக்கேற்ப இசையமைத்து அதிசயிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com