தலைவிரித்தாடும் நிறவெறி… 88 ஆண்டுகளில் ஒரே ஒரு கறுப்பருக்குத்தான் ஆஸ்கர் விருது!

oscarஆஸ்கர் விருது விழாவின் நீண்ட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்… உண்மையிலேயே மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. கறுப்பினத்தில் எத்தனையோ மகத்தான கலைஞர்கள், படைப்பாளிகள் இருந்தும் கூட, அவர்களை முற்றாக ஒதுக்கித் தள்ளி வெள்ளை இனத்தவருக்கே அத்தனை விருதுகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள், ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஒரு ஆப்ரிக்க – அமெரிக்க கலைஞருக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

மற்ற எந்த ஆண்டும் மறந்தும் கூட கறுப்பின கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டதில்லை. ஹாலிவுட்டில் நிலவும் இந்த நிறவெறியைக் கண்டித்து இந்த ஆண்டு பல முன்னணி கலைஞர்கள் ஆஸ்கர் விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். அவர்களில் முக்கியமானவர் பிரபல நடிகர் வில் ஸ்மித். இந்த ஆண்டு நியாயமாக அவர் பெயரும் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும்.

காரணம் கன்கசன் படத்தில் அவரது அபாரமான நடிப்பு. ஆனால் கண்டு கொள்ளவே இல்லை விருதுக் குழு. கொதித்தெழுந்த ஸ்மித்தின் மனைவி ஜாடா பென்னட் ஸ்மித், விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறினார். வில் ஸ்மித், ஸ்பைக் லீ, அனோனி, ரோஜர் ராஸ் வில்லியம்ஸ், அவா டுவெர்னீ உள்பட பலரும் புறக்கணித்த விழா இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வெள்ளையரல்லாத நடிகர் நடிகையும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது இன்னொரு சோகம்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறக் கூட கறுப்பின கலைஞர்கள் தகுதியில்லாதவர்களா என்ற குரல் ஆவேசமாக எழுந்தது. இந்த நிறவெறியைக் கண்டித்து ரெவெரன்ட் அல் ஷார்ப்டன் தலைமையில் ஒரு குழு ஆஸ்கர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டது. ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இடம்பெறும் பெயர்கள் அகாடெமியிலுள்ளவர்களின் பரிந்துரையின் படியே தேர்வு செய்யப்படுகிறது.

சுமார் 6,000 பேர் அடங்கிய அந்த அகாடெமியில் 94 சதவிகிதம் பேர் வெள்ளையர்களே. இப்படியிருக்கையில் இனப்பாகுபாடு இல்லை என்று எப்படி நாம் இவ்விஷயத்தை ஒதுக்கிவிட முடியும்? இப்படி வெள்ளையர்களை மட்டும் கவுரவப்படுத்த எதற்காக விருது வழங்க வேண்டும்? அதுவும் எந்த வித பாகுபாடும் தெரியக்கூடாத கலைத் துறையில்? இந்தக் கேள்வி உலகெங்கும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

tamil.filmibeat.com