நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில்லை

நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என, திரைப்பட இயக்குநர் கதிரவன் வேதனை தெரிவித்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் இயக்கி வெளிவந்திருக்கும் படம் “கோடை மழை’. திருநெல்வேலி வட்டார பேச்சு வழக்கை பயன்படுத்தி, கிராம மக்களின் வாழ்க்கையை யாதார்த்தமாக சித்திரிக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. கோபத்தால் ஏற்படும் வாழ்க்கைச் சீரழிவை மையக் கருவாகக் கொண்டது. சர்வதேச திரைப்பட விருது போட்டியில் பங்கேற்ற படங்களில் ஒன்று.

இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள சங்கரன்கோவில் திரையரங்கில், ரசிகர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய கதிரவன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருநெல்வேலி மக்களின் பேச்சு வழக்கை, குறிப்பாக, சங்கரன்கோவில் வட்டாரத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து “கோடை மழை’ படம் எடுத்தேன். மிகவும் கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டிருக்கிறோம். ஆனால், புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு வாய்ப்பு வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் மறுக்கிறார்கள். குறிப்பாக, நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது. இதுதொடர்பாக இயக்குநர் சங்கத்தினர் மூலம் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பேசி, திரும்பவும் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

-http://www.dinamani.com