திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குழு:தயாரிப்பாளர் எஸ். தாணு

tanuதிருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குழு அமைப்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி அமைப்பு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:-

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவர். க்யூப் நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியதில், நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. 100 திரையரங்குகளுக்கு குறைவாக வெளியாகும் படங்களுக்கு 1,400 ரூபாய் குறைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனை மேலும் குறைக்க சொல்லி இருக்கிறோம்.

திருட்டு வி.சி.டியை ஒழிப்பது தொடர்பாக குழு அமைப்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி அமைப்பு ஆகியோரின் ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சுரேஷ் காமாட்சி, மன்சூர் அலிகான், ஃபெப்ஸி விஜயன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு மானியம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பண்டிகை காலங்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுவது குறித்து சினிமா கூட்டமைப்பில் பேசப்படும்.

இளையராஜாவின் இன்னிசை கச்சேரி: தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்க நிதி திரட்டுவதற்காக இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்கான உரிமையை வழங்க முன்னணி தொலைக்காட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

சங்கத்தில் 1,150 நிரந்தர உறுப்பினர்கள் இருக்கிறார்கள். யாரேனும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், ஓய்வுத் தொகை வழங்கப்படும். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

சங்கச் செயலர்கள் டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பி.எல்.தேனப்பன், எஸ்.கதிரேசன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு-செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டது. மேலும், சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

-http://www.dinamani.com