சிறந்த இசைக்கான விருதை ஏன் பிரித்துத் தருகிறீர்கள்? – மத்திய அரசுக்கு இளையராஜா கடிதம்

ilayarசிறந்த இசைக்கான தேசிய விருதை ஏன் இரண்டாகப் பிரித்துத் தருகிறீர்கள்? இது பாதி அங்கீகாரம் அளிப்பதற்கு சமம் என்று 5வது முறையாக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய அளவில் 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளில், தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில், சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்குக் கிடைத்தது.

இளையராஜா பெறும் 5 வது தேசிய விருது இது. நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இளையராஜா கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் எழுதியதாவது: 2010 ஆம் ஆண்டு வரை இசைக்கு ஒரே விருதுதான் வழங்கப்பட்டு வந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ரவீணா படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றிருக்கிறேன். ஆனால் 2010-க்குப் பிறகு இசைக்கான விருதை இரண்டாகப் பிரித்துவிட்டது ஏன்? இசையமைப்புக்கு ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்படவேண்டும். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றுக்கு வழங்கப்படுவது போல. படத்தின் பாடல்கள், பின்னணி இசை என இரண்டையும் கருத்தில்கொண்டே சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அளிக்கப்படவேண்டும். சிறந்த பின்னணி இசைக்கு மட்டும் விருது என்பது பாதி வேலைக்கு மட்டும் அங்கீகாரம் அளிப்பதாகும். இந்த நிலை மாறவேண்டும்.”

tamil.filmibeat.com