அனுபவம் இல்லாத இயக்குனர்களால் படங்கள் தோல்வி அடைகின்றன: டைரக்டர் சுந்தர்.சி பேட்டி

sundhar cடைரக்டர் சுந்தர்.சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது முதல் நாள் படப்பிடிப்பில் திமிருடன் நின்று கொண்டு இருந்தேன். அவர் என்னை திட்டி கேமரா முன்னால் கிடந்த சாணியை அள்ளச் சொன்னார். அது எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று என்னை பக்குவப்படுத்தியது.

நிறைய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது எடுத்த பயிற்சிதான் பிற்காலத்தில் சிறந்த இயக்குனராக என்னை உருவெடுக்க வைத்தது.

ஆனால், இப்போது அப்படி இல்லை. சினிமாவில் எந்த பயிற்சியும் இல்லாமல் படங்கள் டைரக்டு செய்யும் பலரை பார்க்க முடிகிறது. அனுபவம் இல்லாத இயக்குனர்களால் படங்கள் தோல்வி அடைகின்றன.

தவறானவர்களிடம் தயாரிப்பாளர்களும் ஏமாந்து படங்கள் இயக்க வாய்ப்பு தருகிறார்கள். படம் தோல்வி அடைந்த பிறகு சினிமாவே வேண்டாம் என்று அந்த தயாரிப்பாளர்கள் ஓடி விடுகின்றனர்.

சினிமாவை நம்பி 100 குடும்பங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து இயக்குனர்கள் படங்கள் எடுக்க வேண்டும். இயக்குனர்கள் கதை சொல்வதில் மயங்கி அவர்களை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது.

அனுபவம்-திறமை இருக்கிறதா? இதற்கு முன்பு படங்களில் பணியாற்றி இருக்கிறார்களா? என்பதை பார்த்து பட வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். குறைந்தது இரண்டு படத்திலாவது உதவி இயக்குனராக பணியாற்றிவர்களுக்கே படங்கள் இயக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

டைரக்டராக இருந்த நான் கடந்த 5 வருடங்களாக நடிக்க ஆரம்பித்தேன். தற்போது மீண்டும் படங்கள் இயக்கி வருகிறேன். இதற்கிடையில் மலையாளத்தில் பிஜுமேனன் நடித்து வெளிவந்த வெள்ளிமுங்கா படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்தது.

வயது அதிகமான ஒருவன் தன்னைவிட அதிக வயது குறைந்த பெண்ணிடம் காதல் வயப்படுவதும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. இந்த கதையை ‘முத்தின கத்திரிக்கா’ என்ற பெயரில் தமிழில் தயாரித்து நடித்துள்ளேன்.

இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.

-http://tamilcinema.news