தஞ்சை: நதி நீர் இணைப்புக்காக தான் கொடுப்பதாகச் சொன்ன ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே கொடுத்துவிட்டார் என்றும், அந்தப் பணம் வங்கியில் வைப்பு நிதியாக உள்ளதாகவும் ரஜினி அண்ணன் சத்யநாராயணா ராவ் கூறினார்.
கடந்த 2002-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தின் முடிவில் ஆளுநரிடம் காவிரி நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு குறித்து மனு கொடுத்த ரஜினி, நதிகள் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்தால் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 1 கோடி தருவதாக வாக்களித்தார்.
அதன் பிறகு 14 ஆண்டுகள் கடந்தும், இன்னும் நதி நீர் இணைப்பு குறித்து பாஜக அரசோ, காங்கிரஸ் அரசோ எதுவும் பேசவில்லை. எந்தத் திட்டமும் போடவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நதிகளை இணைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே அது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார்.
இந்த நிலையில் திடீரென விவசாயிகள் என்ற பெயரில் சிலர் ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என மிரட்ட ஆரம்பித்தனர்.
இவர்கள் உண்மையில் விவசாயிகள்தானா அல்லது பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்களா என பலரும் பேச ஆரம்பித்த நிலையில், இதற்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர் கூறுகையில், “ரஜினி அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். கபாலி ரிலீசின்போது திரும்பி விடுவார்.
நதி நீர் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனை அந்தத் தொகை முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி,” என்றார்.
-http://tamil.oneindia.com
ஒரு கோடி என்பதெல்லாம் ரஜினிக்கு ஒரு தொகையே அல்ல. அதற்குள் நாமே ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் அப்படி இப்படி என்று! அடாடா! என்ன மனிதர்கள் நாம்!