மும்பை: முன்பு போல என்னால் இசையமைக்க முடியாது. இப்போது எனக்கு வயதாகி விட்டது. அதற்கேற்ப இசையமைப்பேன் என்று கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள வரலாற்றுக் காவியம் மொகஞ்சதரோ. எட்டுப் பாடல்கள் படத்தில். அதில் து ஹே என்ற பாடலை ரஹ்மானே பாடியுள்ளார்.
இப்படத்தை மும்பையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் அசுதோஷ் கோவரிக்கரும், ரஹமானும் இணைந்து கலந்துரையாடினர்.
அப்போது பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ரஹ்மான் தனது பாணியில் பதிலளித்தார். அவர்களின் உரையாடலிலிருந்து… எப்படி இந்தப் படத்துக்கு இசையமைக்க சம்மதித்தீர்கள்? உண்மையைச் சொல்லட்டா.. முதலில் நீங்கள் என்னிடம் கதையைச் சொல்லியபோது, ஆஹா பெரிய போரடிக்கிறத டாக்குமெண்டரிப் படம் போல இருக்குமோ என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் காட்டிய புகைப்படங்கள்,சில விஷூவல்கள், கதைப் பின்னணி ஆகியவற்றை கேட்டு முடித்தபோது அசந்து போய் விட்டேன். அதன் பிறகு எனது கற்பனையை தட்டி விட்டேன். இதற்கேற்ற இசைக்குள் போக ஆரம்பித்தேன்.
எப்படி உங்களால் பலவித கலாச்சாரத்திற்கும் ஏற்றார் போல இசையமைக்க முடிகிறது? இந்தியப் படங்கள், ஹாலிவுட் படங்கள், தென் அமெரிக்க இசை என சகலத்தையும் எப்படித் தர முடிகிறது? இதை முன்பு நான் மிகவும் சிறப்பாக செய்தேன். செய்ய முடிந்தது. இப்போது வயதாகி விட்டது. எனவே முன்பு போல செய்ய முடியாது. இப்போதைய நிலைக்கேற்ப சற்று ஆழமான விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறேன்.
அடிப்படையில் நாம் மனிதர்கள். அனைவருக்கும் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற உணர்வுகள் பொதுவானவை. காதல், குரோதம், சோகம், ரொமான்ஸ், கனவு என எல்லாமே ஒன்றுதான். இது உலகளாவிய விஷம். இதை இசையில் நமது தேவைக்கு ஏற்ப மாற்றித் தருகிறேன். அனைத்து உணர்வுகளும் பொதுவானவை என்பதால் அனைவரிடமும் எனது இசை எளிதாக சென்று சேருகிறது. இதில் ரகசியம் ஏதும் இல்லை என்றார் ரஹ்மான். மொகஞ்சதரோ ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வருகிறது.