கபாலி படத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் வசூலை மட்டும் தற்போது எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் நான்கு நாட்களில் செய்ய முன்பதிவும், வசூலிக்கப்படும் வருமானமும் கபாலி படத்திற்குக் கிடைத்த வெற்றி அல்ல. ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ரஜினி ரசிகர்களின்பலத்திற்கு கிடைத்த வெற்றியே.
அதன்பிறகு எடுக்கப்படும் டிக்கெட்கள் மற்றும் ரசிகர்களின் ஆர்வம் தான் கபாலி படத்தின் வெற்றியை நிர்மாணிக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்கள், மாதங்கள் என, நாம் கேட்டது, பார்த்தது, கேள்விப் பட்டது எல்லாமே கபாலி, கபாலி தான். அவ்வளவு எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள், தரையில் இருந்து வானில் பறக்கும் விமானம் வரை விளம்பரங்கள்..
படத்தை ஒரு முழு அலசல் செய்தால், நடிகைகளின் நடிப்பும், இளவட்ட நடிகர்களின் துடிப்பும் அபாரம். படத்தினை தூக்கி நிறுத்தியதில் இசை மற்றும் ஒளிப்பதிவிற்கு முக்கிய பங்கு உள்ளது. மற்ற படி ஏதும் பெரிதாக இல்லை என்றே ஒரே வரியில் கூறலாம்.
ரஜினியின் ரசிகர்களுக்குப் படத்தின் முதல் 15 நிமிடமே முழு திருப்தியாக அமைந்தது என்று கூறும் அளவிற்கு அங்கு மட்டுமே மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குநரும், நடிகரும். வரிசையாக ரஜினியின் படங்கள் ஊற்றி மூழ்க (கோச்சடையான், லிங்கா ) இந்தப் படமாவது வெற்றியை அள்ள வேண்டுமென்றே ரசிகர்களின் எதிர்பார்ப்பும், தயாரிப்பாளரின் முன்னெச்சரிக்கை தான் படம் வெளிவருவதற்குள் அள்ளிய வசூலும், விளம்பர சாதனையும்..
மாஸ் ஹீரோ, சூப்பர் ஸ்டார், தலைவர் என்ற புகழ் ஒரு புறம் இருக்க, நல்ல விமர்சனத்திற்குக் கதை முக்கியம் இல்லையா ..? தலைவர் படம் தவறு ஏதும் இருக்காது, எதுவானாலும் புகழில் குறை இருக்கக் கூடாது என்ற நினைப்பினை சற்று நேரம் ஒதுக்கி வைக்கலாம். இதே கதை சாதாரண நடிகர் நடித்திருந்தால் இவ்வளவு விளம்பரங்களும், கொண்டாட்டங்களும், எதிர்பார்ப்புகளும், படம் வெளிவருவதற்குள் பல கை மாறும் வியாபாரமும் கண்டிப்பாக நடந்திருக்காது.
ரஜினி படம் என்றும் மாஸாக தான் இருக்கும் என்றும், ரஞ்சித்தின் புது மாதிரியான சிந்தனை யுக்தியும் இணைந்தால், கண்டிப்பாக அது பிரமாண்ட ஸ்பெசலாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றமே அளித்துள்ளது.
தலைவரை விட்டுகைகொடுக்க மனமில்லாத ரசிகர்கள் இயக்குநரை குறை கூறுகின்றனர். அதேசமயம் இதில் நடிகரின் பங்கும் இருக்கிறது என்று உணரத் தவறவிடுகின்றனர்.
மலேசியா வாழ் தமிழருக்கு உதவும் கேங்ஸ்டர் எனக் கதைக்கு கரு வைத்துவிட்டு, தன் குடும்பத்தை தேடும் தனி மனிதனின் வாழ்க்கையாகவே படம் நகர்கின்றது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்கும் ரசிகர்களை, இப்படம் கண்டிப்பாக ஏமாற்றாது.
கமல்ஹாசன் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டார். பாலிவுட்டிலும், அமிதாப் பச்சன் அவருக்கான ரோலை தேர்ந்தெடுக்கவில்லையா? மாஸ் கட்ட வேண்டுமென்றால், எந்த ரோலில் இருந்தும் காட்டலாமே..
ரஜினிகாந்தின் ஒவ்வொரு படமும் வெளிவந்ததும் தவறாமல் வந்து விழும் அனைவரின் கருத்து, ரஜினி இதற்கு மேலும் சோலோ ஹீரோவாக பயணிப்பதை சற்று குறைத்துக்கொள்ளலாம். ஆம் தலைவா! இன்னும் எதற்கு விஷப்பரீட்சையெல்லாம்… இதோடு முடிவெடுத்திடுங்க….