அண்மையில் ராணுவப் புரட்சி முயற்சிகளால் உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது எகிப்து. வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணை அதிபர் வேட்பாளராக நிறுத்தி, மனித சமூகத்தையே நிமிர வைத்தது அமெரிக்கா. நம் இந்தியத் திருநாட்டிலோ, தமிழ்த்திரையுலகக் கரையிலிருந்து புறப்பட்ட இரண்டரை மணிநேரத் திரைப்படமொன்று சுனாமி போல சுழன்றடித்து, பாராட்டு மாலைகள், விமர்சனக் கணைகள் என எல்லாவற்றையும் கடந்து ஓடிக் கொண்டுள்ளது.
குறிப்பாக, அறிமுகப்படுத்தப்பட்ட விதத்தால் ‘கபாலி’ திரைப்படம் ஆசியத் திரை உலகையே அசைத்துப் பார்த்தது. சந்தைக்குக் கொண்டு வரப்படும் எல்லாப் பொருட்களும் இப்படிப்பட்ட அலங்காரங்களைச் சுமந்து வருவது இங்கே நடைமுறையாக ஆக்கப்பட்டு விட்டதால் இந்த விமர்சனக்கணைகளை எளிதாக இத் திரைப்படம் கழற்றிக் காற்றில் வீசி விட்டது. கபாலி சம்பாதித்த கோடிகள், விமானத்தில் வரையப்பட்டு வானத்தையும் வசப்படுத்திய விளம்பரங்கள் ஆகிய எல்லா வாண வேடிக்கைக்கும் அப்பால் ஒரு உண்மையும் இப்படத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றது.
கலங்கரை விளக்கத்தின் மீது சுழலும் ஒளிவிளக்கு, எல்லாத் திசைகளிலும் வெளிச்சத்தை வீசிச் செல்வதைப் போல, மலேசியாவின் ஏறத்தாழ பதினேழு லட்சம் இந்தியத் தமிழர்களின் வரலாற்றின் மீது இப்படம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி நகர்ந்துள்ளது. பொதுவாக ஈழத்திற்கு அப்பால் வாழும் தமிழர்கள் பற்றிய விவரமான செய்திகள், தமிழ்நாட்டு மக்களிடத்தில் எப்போதுமே முழுமையாக இருந்ததில்லை.
தங்களின் சொந்த உறவு வேர்கள் இந்திய எல்லைக்கு அப்பால் விரிந்துப் பரவியிருக்கும் செய்திகளாயினும், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களானாலும் அத்திப் பூத்தாற் போல இங்கே தோன்றி மின்னல் போல மறைந்து விடும். ஆனால் காற்றில் வேடிக்கையாக ஊதிப் பறக்கவிடும் சோப்பு நுரைக் குமிழ்களைப் போன்ற கதைகளையே பொதுவாகத் தமிழ்ச் சமூகத்தின் மீது மிதக்கவிடும் தமிழ்த் திரையிலிருந்து வந்திருக்கும் வித்தியாசமான படம், ‘கபாலி’. அதற்குக் காரணம், சத்தியமாக, அதில் நடித்துள்ள இந்தியாவின் முன்னணி நட்சத்திரமோ, படத் தயாரிப்புக்காகச் செலவிடப்பட்ட தொகையோ மட்டுமல்ல; இரத்தமும் சதையுமான அதன் கதை. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் கண்களில் நீர்வடிய, வயிற்றில் பசியோடு ஐயோ என்று கதறியவாறு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பலேறிச் சென்ற லட்சக்கணக்கான தமிழர்களின் கதை.
தமிழுலகம் அதிகம் பேசாத அயலகத் தமிழனின் வாழ்க்கைக் கதையைத் தான், இயக்குநர் ரஞ்சித் ஒரு திரைக்காவியமாக வரைந்திருக்கின்றார். கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில், இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், பிஜி, ரியூனியன், குவாதலூப், மார்ட்டினிக் போன்ற மேற்கிந்தியத் தீவுகள், மடகாஸ்கர், சுரினாம், டிரினிடாட், கயானா என்று இப் பூமிப்பந்தின் அறிந்திராத திசைகளை நோக்கி ஏழைத் தமிழர்கள் ஓடிக் கொண்டேயிருந்தனர். பஞ்சம், உயிரைக் கொல்லும் கொடியபசி, சாதிக் கொடுமை என்று அவர்களின் புலப் பெயர்வுக்கு ஏதேதோ காரணங்கள் இருந்தன.
எந்தக்கடற்பரப்பில் சோழக்கொடி ஏந்தி வரிசையாக நாடுகளைப் பிடித்த சாகசங்களை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதே கடற்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூலிகளாகப் பயணம் சென்ற விசித்திரத்தையும் அன்றைக்கு வரலாறு பார்த்தது. அப்படிச் சென்றடைந்த நாடுகளில் எல்லாம், தன் வியர்வைத் துளிகளாலும், குருதிச் சொட்டுகளாலும் காபி, கோகோ, தேயிலை, செம்பனை, ரப்பர் என்று தமிழன் வளர்ந்த பயிர்கள் ஏராளம். இவ்வாறு செல்வமீட்டிய நாடுகள்தான் இன்றும் வளமாகச் செழித்துக் கிடக்கின்றன என்பது, நம் தாய்த் தமிழகச் சனங்களில் பலருக்கும் தெரியாது.
ஏதோ ஒரு நாட்டின் பசுமைக்காக, தன்னையே தேயிலைச் செடிகளின் கீழ் உரமாகப் புதைத்துக் கொண்ட தமிழனின் கதையை மகாகவி பாரதியார், புதுமைப்பித்தன், அகிலன் போன்ற அபூர்வமான சில படைப்பாளிகள்தான் பதிவு செய்து வைத்தனர். பழங்கதையாகி விட்ட இக் கண்ணீர்த் துளிகளில் ஒரு கீற்றை உருவியெடுத்து இயக்குநர் ரஞ்சித் ‘கபாலியாக’கணினியுகத் தமிழர்களின் முன் உலவவிட்டுள்ளார்.
இந்தியர்களின் அரசியல் பார்வையில், தமிழர்களின் சரித்திரமும், எல்லைகளும், இப்பெரும் தேசத்தின் தென்கீழ்ப்புறமுள்ள ஒரு மாநிலத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இந்தியத்தேசத்துக்குள் வாழ்ந்தாலும், தமிழ்மாநிலத்தின் வேர்கள் நீளும் தூரம் இந்தியாவின் பரப்பைக் காட்டிலும் பெரியது. அதனால்தான், ஈழத்தில் அடித்தால் இங்கே வலிக்கிறது. மொரிசியசில் ஒடுக்கப்பட்டால் இங்கே முணுமுணுப்பு எழுகின்றது.
உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான இந்தியத் தமிழர்களில் மலேசியத் தமிழர்களின் கதை ஒப்பற்றதாகும். தமிழ் மொழிக்கும், இந்திய விடுதலைக்காகவும் மலேசியத் தமிழர்கள், செய்த தியாகங்களும் உயிர்க் காணிக்கையும் இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றின் மூலையில் ஒரு புள்ளியாகக் கூட இதுவரை பதிவானதில்லை. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தம்மையே நெய்யாக ஊற்றித் தியாகம் செய்த பெருமை, மலேசியத் தமிழர்களையே சேரும்.
ஆம்! இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் இருந்த 90 விழுக்காடு வீர்ர்கள் மலேசியத் தமிழரே. அந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைக் கண்ணால் கூட கண்டிராதவர்கள். அவர்கள் தங்களுடைய மூதாதையர்களின் தாய்நாட்டு விடுதலைக்காகத் தங்களின் உயிரைத் துச்சமென மதித்து நேதாஜியின் படையில் வந்து சேர்ந்தவர்கள். ரப்பர்த் தோட்டங்களில் பால் எடுக்கும் பணியை உதறிவிடுத்து ‘ஜெய்ஹிந்த்’ என்று முழக்கமெழுப்பிச் சென்ற ஆண்கள், தங்கள் காரிருங் கூந்தலைக் கத்தரித்து எறிந்து விட்டு ‘டெல்லி சலோ’ என்று வீர முழக்கம் இட்ட பெண்கள், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று ஆனந்தக் கூத்தாடிய ஆயிரமாயிரம் பாலசேனாவைச் சேர்ந்த குழந்தைகள் என ஒட்டுமொத்த மலேசியத் தமிழ்ச் சமூகமே 1943-ஆம் ஆண்டு போர்க்கோலம் ஏந்தி மலேசியத் தீபகற்பத்தைக் கிடுகிடுக்க வைத்தது.
தோள்களில் துப்பாக்கிகளையும் நெஞ்சில் லட்சியத்தையும் சுமந்த தமிழ்வீரர்களும் வீராங்கனைகளும் மணிப்பூர், அசாம் எல்லைகளில் வெள்ளையர்களை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர். மலேசியாவின் ரப்பர்த் தோட்டங்களைச் சேர்ந்த அக் கூலித்தமிழர்கள் தான், சூரியன் அஸ்தமனமாகாத பிரிட்டிஷ் பேரரசை வீழ்த்தி, இந்திய மண்ணில் மூவர்ணக் கொடியைக் கம்பீரமாக நாட்டினார்கள்.
இப்பெரு வெற்றியை அவர்கள் இராணுவக் கவச வாகனத்தில் ஏறிவந்து ஈட்டவில்லை. மலேசியாவிலிருந்து தாய்லாந்து, பர்மா வழியாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வெறுங்கால்களால், புதைந்திடும் சேற்றிலும் காடுகள், பள்ளத்தாக்குகளிலும் பட்டினியோடு நடந்து வந்து வென்று காட்டினர். உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு இணையாகப் பேசியிருக்க வேண்டிய மகத்தான இவ்விடுதலைப்போர் பற்றி மறந்தும்கூட இதுவரை நாம் பேசியதில்லை. இரண்டாம் உலகப்போரின் போக்கு திசை மாறியது. அப்போது பிரிட்டிஷாரிடம் பிடிபட்ட மலேசியத் தமிழர்களில் பலர் தில்லி செங்கோட்டையில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு இந்தியாவிற்காக உயிரைக் கொடையாகத் தந்தனர்.
இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்க உலகெங்கும் சிதறிச் சென்ற தமிழர்க் கூட்டத்தில் மலேசியத் தமிழர்கள் இம்மண்ணுக்குச் செலுத்திய இந்தக் காணிக்கைக்குக் கைம்மாறே இல்லை. வரலாற்றில் நாம் உச்சரிக்க மறந்த தியாகத் தமிழர்கள் என்றால் அது மலேசியத் தமிழர்கள்தான். இவ் வீரத்தமிழரின் கதையையே இளம் இயக்குநர் ரஞ்சித், தமிழ்த்திரையில் அழியா ஓவியமாகத் தீட்டியிருக்கின்றார்.
போலித்தனங்களை மட்டுமே தமிழர்களின் தலையில் வாரிக் கொட்டி வரும் தமிழ்த் திரைப்படக் கூட்டிலிருந்து, தென்கிழக்காசியாவில் வாழும் தமிழனின் கதையைத் தேடிச் சென்று கூவியிருக்கின்றது ‘கபாலி’ குயில். எல்லாவற்றுக்கும் மேலாக, வெறும் ஸ்டைல் இயந்திரமாக மட்டுமே வார்த்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினியை, தமிழரின் கதையைச் சுமந்துச் செல்லும் காவியநதியாக மாற்றிக் காட்டிய இயக்குநரின் வித்தகத்தைப் பாராட்டுவதல்லவா முறை? தமிழனின் கதையைப் பேச வந்த அபூர்வ ரஞ்சிதத்தைப் பாதுகாப்பது நம் கடமை என்பதை உணர்ந்திடு அருமை இளந்தமிழா!
-இரா.குறிஞ்சிவேந்தன்
துணைப் பேராசிரியர்
தமிழ்த் துறை
அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி
காரைக்கால்.
பாராட்டுக்கள் பேராசிரியரே ! மலேஷியா தமிழர்களாகிய நாங்கள் இதுவரை அறிந்திராத விஷயங்களை தெரிவித்துள்ளீர்கள். கண்டிப்பாக நங்கள் அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக இவ்விஷயங்களை எடுத்துரைப்போம்.