காஷ்மோரா – திரை விமர்சனம்

kashmoraகார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள்.

இந்நிலையில், டிவி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்கு பேய் ஓட்ட செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.

மறுநாளே, லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்ட செல்கிறார்.

அங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ., லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கிறது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார்? அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.

பெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார்.

எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

‘ரௌத்திரம்’ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார்.

சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அதேபோல், மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘காஷ்மோரா’ வித்தைக்காரன்.

-http://tamilcinema.news