‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என ஈழத்தமிழர்களுக்காக விருதை துறந்த கவிஞர் இன்குலாப் மரணம்

001முற்போக்குக் கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வைரமுத்து உட்பட பல கவிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் கண்டித்து 2006ம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தமிழக அரசிடமே திருப்பி அளித்தவர் இன்குலாப் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகுல் அமீது என்ற இயற்பெயர் கொண்ட இவர் புரட்சி என்ற பொருள்தரும் இன்குலாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

கவிஞர், பேராசிரியர், பொதுவுடமைச் சிந்தனையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர் இன்குலாப். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே இவரது படைப்புகள் இருக்கும். சிற்பி இலக்கிய விருது, வைரமுத்து விருது ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பதிவு செய்யும் விதமாக ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என்ற மேடைப் பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். அந்தப் பாடல் இன்றளவும் தனித்த கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்குலாப் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்குலாப் உயிரிழந்துள்ளார்.

-http://www.cineulagam.com