[கா. கலைமணி – [email protected]]
மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்டத் தடயங்கள் திட்டமிட்டே அம்னோவின் ஆதிக்கத்தால் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்றுத் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான எதிர்காலத்தில் முடியும் என்பது என் மனத்தை நெடு நாட்களாக உறுத்திக் கொண்டு இருக்கும் விடயமாகும்
நியாயமான சம்பளம், குடியிருப்பு, சுகாதாரம், கல்வி போன்றவைகளுக்காக கிள்ளானில் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு எதிராக இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்ததே, நாட்டின் சுதந்திரத்திற்காக நம்மவர்கள் தொடக்கி வைத்த முதல் போராட்டப் படியாகும் என்பதை வரலாறு ஒப்புக் கொள்கிறது.
துன் வீ. தி. சம்பந்தனுக்கு முன்னாலேயே கணபதி போன்றோர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக பிரிட்டிசாரால் தூக்கிலிடப் பட்டுள்ளனர். இவரின் போராட்டங்கள் நம்மவர்களுக்கே தெரியாமலும், நினைவிலும் இல்லாதபோது நம்மை அடக்கி ஆண்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு மட்டும் அக்கறை இருக்குமா என்ன?
அந்த வகையில் இதோ ஒரு ஈரோஷிய பெண்ணின் வரலாறு.
சைபில் 3.9.1899-ல் மேடான், இந்தோனேசியாவில் பிறந்த ஈரோஷியப் பெண். நர்ஸாகவும், தாதியாகவும் வேலை செய்தவர். 1919-ல் டாக்டர் அப்டோன் க்ளெமெண்ட் கதிகாசு என்பவரைக் கரம் பிடித்து சைபில் கதிகாசுவானார், ஓல்கா மற்றும் தவம் ஆகிய இரு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்து, ஆண் வாரிசு இல்லாதக் காரணத்தால் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வில்லியம் பிள்ளை என்றப் பெயர் சூட்டினர்.
கணவனும் மனைவியும் ஈப்போவில் உள்ள ப்ரெவ்ஸ்டர் சாலையில் (இப்பொழுது ஜாலான் சுல்டான் இட்ரிஸ் ஷா) இரண்டாம் உலகப் போருக்கு முன் 14 வருடங்கள் இங்கே கிளினிக் நடத்தியுள்ளனர். தாய்மை உள்ளம் கொண்டிருந்த திருமதி சைபில் கண்டோனிஸ் மொழியை சரளமாகப் பேசக் கூடியவர். உதவி என்றுக் கேட்டு வருவோரிடம் தாயன்போடு அவர்களை அரவணைக்கும் முறையால் அந்த வட்டாரத்தில் உள்ள சீனர்கள் மத்தியில் தெய்வம் போல் போற்றக் கூடியவராக இருந்தவர்.
1941-ல் ஜப்பானியர்களால் மலாயாக் கைப்பற்றப்பட்டபோது, இவர்களின் இருப்பிடத்தை எண் 74, நெடுஞ்சாலை, பாப்பான் என்ற சிறிய நகருக்கு மாற்றிக் கொண்டனர். இங்கிருந்து தான் திருமதி சைபிலின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
ஜப்பானிய இராணுவத்திற்கு எதிராக மலாயா மக்கள் (Malayan people Anty Japanese Army அல்லது MPAJA) என்ற அமைப்புக்கும் உள்ளூர் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளார். இந்த அமைப்பின் இருந்த அனைத்து சுதந்திரப் போராட்டவாதிகளுக்கும் இரகசியமாக மருந்துகள் வழங்குவதிலிருந்து மருத்துவங்களும் கணவனும் மனைவியும் செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி வீட்டினுள்ளே இரகசியமாக பாதுகாக்கப்பட்ட சக்தி மிக்கத் தொலை தொடர்பு சாதனம் மூலம் உலக நடப்புகளை முக்கியமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஆகக் கடைசியான செய்திகளை தெரிவிப்பதோடு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மிகவும் துணிச்சலான இவரின் செய்கை வீரர்களுக்கு வெற்றியை அளித்ததோடு மற்றும் நின்றுவிடாமல் ஆட்சியாளர்களுக்குப் பெரியத் தலைவலியே உண்டாக்கியுள்ளது. ஜப்பானிய ஆட்சிக்கு எதிராக இதுப் போன்ற நடவடிக்கைகள் மிகப் பெரியப் போர் குற்றமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிப்பார்க்க முடியாதக் கடுமையானத் தண்டனைக்கும் ஆளானதுண்டு. அந்த வகையில் திருமதி சைபில் ஜப்பானியர்களால் கட்டாயமாக அழிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
மலாயாவின் சுதந்திரத்திற்காக திருமதி சைபிலும் அவரதுக் கணவரும் 6000 மேற்பட்ட சுதந்திரப் போராட்டவாதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என்ற வரலாறும் உண்டு. அவர்களின் நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாகக் கண்காணிக்கப்பட்டு சில புல்லுருவிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டனர். 1943-ல் கைதுச் செய்யப்பட்டு, சுதந்திரப் போராட்டவாதிகளின் பெயர் பட்டியலைக் கொடுக்கச் சொல்லி தன் கண் முன்னாலேயே கணவரையும், மகன் 7 வயது நிரம்பிய மகள் தவம் ஆகியோரை கடுமையாகக் கொடுமைப்படுத்தினர்.
மலாயாவின் சுதந்திரத்திற்காக தங்களின் இன்னுயிரைத் துச்சமாக மதித்து, 30,000 பேர் அங்கத்துவம் கொண்டப் போராட்டவாதிகளைக் காட்டிக் கொடுப்பதைவிட என் குடும்பத்தோடு மடிவதே மேல் என்று சூளுரைத்த திருமதி சைபிலியை ஜப்பானிய இராணுவம் விடுவதாக இல்லை. அவரின் பெண் உறுப்பினுள் சவர்க்காரத் தண்ணீரைச் செழுத்தி, வலுக்கட்டாயமாக பல மணி நேரம் பனிக்கட்டி மேல் உட்கார வைத்து தூங்கவிடாமல் வதைத்துள்ளனர்.
தன் பெண் பிள்ளையைக் கயிற்றில் தொங்கப் போட்டுக் கீழே நெருப்பை எரிய விட்டு ஊஞ்சல் போல் ஆடவிட்டும், காட்டிக் கொடுக்கவில்லை. அவர் அடைத்து வைக்கப்பட்ட பத்துகாஜா சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டு மேலும் கொடுமைக்கு ஆளானார்.
நாகசக்கியிலும் ஹிரோஷிமாவிலும் போடப் பட்ட அணுகுண்டின் விளைவால் தோல்வியுற்றதின் எதிரொலியாக மூன்று வருட கொடுமைகள் மற்றும் கடுங்காவலுக்குப் பிறகு 1947-ல் விடுதலைச் செய்யப்பட்ட திருமதி சைபில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தக் காரணத்தினால், சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப் பட்டார். அப்போது அவர் எழுதிய நாவல் NO DRAM OF MERCY மிகவும் பிரபலமானது.
சிறையிலிருந்து வெளியான 7 மாதத்தில் அதாவது 12.6.1948 காலமானார். முதலில் ஸ்காட்லாந்தில் உள்ள லனர்க் என்ற இடத்தில் புதைக்கப்பட்டாலும், பிறகு கடல் வழி அவரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து பினாங்கிற்கும் பிறகு ஈப்போவிலுள்ள அவர் வீட்டிற்கும் கொண்டுவந்து, சேயிண்ட் கோயிலிக்கு அருகிலுள்ள ரோமன் கத்தோலிக்க இடுகாட்டில் அரச மரியாதையோடு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மலாயாவில் மட்டுமின்றி, தாய்லாந்து, வியட்னாம், போர்னியோ, இந்தோனேசீயா போன்ற நாடுகளினிருந்தும் அவரின் இறுதி ஊர்வலத்தில் பிரீட்டீஸாரின் பாதுக்காப்போடு சுமார் ஒரு இலட்சம் பேர்க் கலந்துக் கொண்டது திருமதி சைபிலின் சுதந்திர உணர்வுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகரமாகும். மலாயாவில் வேறு எந்த இனத்திற்கும் இவ்வளவுப் பெரியக் கூட்டம் கூடியதில்லை.
அதோடு இவரின் தைரியமானப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் THE DISTINGUSHED GEORGE MEDAL (GM),என்ற மிகவும் மதிப்புக்கூரிய பட்டத்தை வழங்கி சிறப்பிக்கப் பட்டது. இப்பட்டம் KING GEORGE VI அவர்களின் நினைவால் வழங்கப்படுவதாகும். அது மட்டுமின்றி இப்பட்டத்தைப் பெற்ற முதல் மலாயாப் பெண்மணி திருமதி சைபில் என்றப் பெருமையும் இவருக்கு உண்டு.
திருமதி சைபில் மிகப் பெரிய சுதந்திரப் போராட்ட நாயகி. சுதந்திரத் தாகத்தை இந்நாட்டில் தமிழர்கள் ஏற்றி வைத்தாலும், சுதந்திரத்திற்காக அதிக அளவிலும் சீனர்கள் போராடி உள்ளனர். மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களைவிட, ஜப்பானிய ஆட்சிக்கு எதிராக சீனர்களே அதிக நெருக்கடிக் கொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் மேல் சந்தேகம் ஏற்படுமாயின் கண்ட இடத்தில் சுட்டுத்தள்ளும் நிலமைக்கும் ஆளாயினர். இருப்பினும் இன்றும் கூட அவர்களின் தியாகத்தை கம்னியூஸ்டாக சம்பத்தப்படுகிறது.
வரலாறு தெரிந்த சீனர்களின் இதயத்தில் திருமதி சைபில் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார். பேராக் பாப்பானில் இவர் வாழ்ந்த வீட்டை (எண் 74, மெயின் ரோடு, பாப்பான்) PERAK HERITAGE SOCIETY தலைவர் திரு. லாவ் சியாக் ஹோங் வரலாற்று சொத்தாக பாதுகாத்துக் கொண்டு வருகிறார்.
2008-ல் கோலாலம்பூரில் திருமதி சைபிலைப் பற்றிய குறுப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் அவரின் சகோதரியின் மகள் எலின் டேலி சைபிலாக நடித்துள்ளார். சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தயாரிக்கப் பட்ட நாடகத் தொடரான அமைதிக்கு விலை (THE PRICE OF PEACE) இவரின் வாழ்க்கையைப் பற்றியது.
இனபேதமின்றி ஒற்றுமைக்காகவும், மலாயாவின் சுதந்திரத்திற்காகவும், மலாயாவுக்கும், மலாய்க்காரர்களுக்காகவும் போராடி கலங்கரை விளக்கானவர் திருமதி. சைபில் கதிகாசு. மலாய்க்காரர் அல்லாத இவர் போன்ற தியாகிகளின் போராட்ட அடிச்சுவடுகளை அம்னோ அரசாங்கம் அழித்துக் கொண்டு வருவது சரித்திரப் பிழையாகும்.
1) PERAK HERITAGE SOCIETY
2) http://www.lestariheritage.net/perak/webpages/papan01.html
3) Zakaria Junid