நந்தினி கொலைக்கு நீதி வேண்டும் – கமல்

kkamalசென்னை: சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கமல் பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி, 17. டிசம்பர் 29ம் தேதி காணாமல் போன சிறுமி கடந்த ஜனவரி 14ஆம் தேதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கீழமாளிகையைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் , அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து முன்னணி தலைவர்

இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத்தினர் அரியலூரில் ஜனவரி 28ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு காலதாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

hindu-munnaniநந்தினிக்கு நீதி வேண்டும்

காவல்துறையினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேக் உடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு வருகின்றனர்.

கமல் பதிவு

இதே ஹேஷ்டேகில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், “நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை.

மன்னிப்பு கேட்கிறேன்

குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல” என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com