பிரபல தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்னையை தீர்க்கும் நிகழ்ச்சியை நடத்திவரும் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பு பிரபல ரிவியில் கடந்த சில மாதங்களாக நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது குடும்ப பஞ்சாயத்து, கள்ளக்காதல், ஏமாற்றப்பட்டவர்களை அழைத்து ஒருமணிநேரம் பேசி அனுப்புவார். இரு தரப்பு பேச்சு வார்த்தையில் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.
பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டுவது, ஆண்களின் சட்டையை பிடித்து அடிப்பது என தனி ராஜ்ஜியமே நடத்தி வந்தார் குஷ்பு. இது சர்ச்சையை உருவாக்கியது. பலரும் குஷ்புவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிரபல தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரும்பஞ்சாயத்து ஆகியுள்ளது. காவல்நிலையம் வரை சென்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள், கள்ளக்காதல், ஓடிப்போனவர்கள், தவிக்கும் பெற்றோர்கள் என பலரும் வந்து தொலைக்காட்சிகளில் பேசுகின்றனர்.
காவல்நிலையத்தில் புகார்
நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி. நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளில் இருவரும் குடும்ப உறவுகளை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாலாஜி அளித்துள்ள புகார் மனுவில், ‘நிஜங்கள்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழச்சிகள் மனித உரிமைகள், மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
நிகழ்ச்சி நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் மோசமாக பேசுகிறார்கள். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களிடம் அந்த படிப்பு இல்லை. குடும்பம், கலாச்சார உறவுகளை அவமானப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
-manithan.com
திரு பாலாஜி கூறுவது முற்றிலும் உண்மை. குடும்ப ஆலோசனை (family counselling ) என்பது விளையாட்டு விஷயம் அல்ல. இதற்கு பல அணுகுமுறைகள் தேவை. நம்மவர்கள் படித்தவன் கூறுவதை விட நடித்தவன் கூறுவதைத்தானே தெய்வ வாக்காக கொள்கின்றனர். நடிகர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிக்கும் திறமையுள்ளவர்கள். அவ்வளவுதான். அவர்கள் எல்லா இடத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நிஜ வாழ்க்கையில் நடிக்கலாமா? திரைப்படங்களில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையை இரண்டரை அல்லது மூன்றரை மணி நேரங்களில் முடித்துவிடுவார், நிஜ வாழ்வில் முடியுமா? கதைகள் எழுதும்போது அந்த கதையின் முடிவை கொண்டுதான் கதை ஓடும். ஆனால் நிஜ வாழ்க்கை பிறப்பிலிருந்து எதார்த்தங்களை எதிர்ப்பார்த்து செல்லுகிறது. முடிவுதனை எவரும் அறியார். நடிகர்களின் முக்கிய குறிக்கோள் ‘பணம்’ மட்டுமே. அது எவ்வழியில் வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வித தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் அவைகளுள் ஒன்று. அதனை நடத்தும் நடிகர்களின் தனி வாழ்க்கையை பார்த்தால், குடும்ப விவகாரங்களில் அவர்களுக்கும் ஆலோசனை தேவைப்படும்.
சில நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்களின் நேரடி தலையீடு இல்லாமல் நடந்து வெற்றியளித்துள்ளது. இந்த சமயத்தில் பக்கவாட்டில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி நடிகர்கள் உட்பட. தமிழ் நாட்டு அரசியல்கூட திரையுலக நபர்களை சார்ந்துள்ளது. நடிப்பவன் தலைவனாக விரும்பினால் தயவு செய்து தலைவனாக நடிக்காமல் உண்மை தலைவனாக முழு மாற்றமடைய வேண்டும். நடிக்கும்போது ஈர்த்த பணத்தை கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் பேணி. பொது வாழ்வில் மக்களின் நலம்பேண வேண்டும். ஒருவனுக்கு எவ்வளவு பணம் தேவை ? தேவைக்குமேல் பலமடங்கு கொள்ளையடித்து என்ன பயன்?. யார் அதனை பயன்படுத்துவர்.? சிந்திப்போம் செயல்படுவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.