சென்னையின் நுழைவு வாயிலாக விளங்கும் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டுப் போட்டோம். இதே நிலை நீடித்தால் நாளை கோட்டைக்கு பூட்டுப் போடுவோம் என திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் கொந்தளித்துள்ளார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 31 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திடீரென்று கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டு போட்டு மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் மாணவர்கள் ஈடுபட்டனர்.
சென்னை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த மேம்பாலத்தை பூட்டுப் போடும் போராட்டத்தில் இயக்குநர் கவுதமன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து புறக்கணித்தால் கோட்டையையும் பூட்டுவோம் என்றார்.
இதுவரை 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். இன்னும் விவசாயிகள் கொல்லும் வேலையை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
அதனால்தான் இத்தனை நாட்களாக போராடும் விவசாயிகளை மோடி சந்திக்க மறுக்கிறார் என்று கவுதமன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்ட அரசு எதற்காக இருக்கிறது என்றும் கவுதமன் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளுக்காக நாம் செத்தோம் என்றாவது வரலாறு சொல்லட்டும். அதற்காகத்தான் நாங்கள் அவர்களுக்காக போராடுகிறோம் என்று கவுதமன் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் என தமிழகத்தை தமிழ் இனத்தை அழிக்கும் வேலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதனை ஒரு போது அனுமதிக்க மாட்டோம் என்று கவுதமன் கூறினார்.
விவசாயிகளை இனியும் மத்திய அரசு புறக்கணிக்குமானால் அடுத்ததாக கோட்டையை பூட்டு போடுவோம் என்று கூறிய கவுதமன், தமிழக எம்பிகள், எம்எல்ஏக்கள் என அனைவரும் டெல்லி சென்று நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
-lankasri.com