வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்…!

vadiveluஅண்ணே… நல்லாருக்கீங்களாண்ணே… உங்களை நாங்க என்னிக்குமே பிரிச்சுப் பார்த்ததில்லைண்ணே…என்னிக்குமே எங்க குடும்பத்துல ஒருத்தர்தான் நீங்க… என்ன எங்க வீட்டு ரேசன் கார்டுல உங்க பேர் மட்டும்தான் இல்ல… இதை நீங்களே சொல்லிருக்கீங்க…

இதை படிச்சுட்டு உங்க நம்பிக்கை இல்லைன்னா எனக்கு போனை போடுங்க… என் வீட்டுக்காரிகிட்ட தாரேன். அவ சொல்லுவா… ‘பொழுதன்னிக்கும் இந்த காமெடி சேனலை மட்டும் தான் பார்ப்பீயாய்யா…? உனக்கு என்ன பைத்தியமா புடிச்சு போச்சு’கற பஞ்சாயத்து தெனம் நடக்குறதுதான்…

முப்பது வருஷத்துக்கு முன்னாடி மாதிரி இல்லீண்ணே மனுச வாழ்க்கை… நெத்தம் ஆயிரம் பிரச்சினைக… மனசு முழுக்க அழுத்தம் இருந்துட்டே இருக்குண்ணே… அதுலேர்ந்து சித்த ஆறுதலா அமையுறது பழைய காமெடிக தாண்ணே… இப்ப வர்ற காமெடிகன்னு கேக்குறீங்களா…? அதுலாம் ஒழுங்கா இருந்தா ஏண்ணே இந்த லெட்டரை எழுதப்போறோம்? எதையோ சொல்லிட்டு அவிய்ங்களே சிரிச்சுக்கறானுவ… நமக்குதான் ஒரு எழவும் தோண மாட்டேங்குது…

டிவியை தொறந்தாலும் ரெண்டு பேர் காமெடி மட்டும் தாண்ணே பார்ப்பேன். ஒண்ணு கவுண்டரு… இன்னொண்ணு நீங்க… என்னோட 34 வருஷ வாழ்க்கைல இந்த பன்னெண்டு வருஷம தான் வெளில அதிகமா பேசறேன். அதுல உங்க டயலாக் இல்லாம எந்த நாளுமே போனதா தோணலைண்ணே… டெல்லில எங்க கம்பெனி மீட்டிங்குக்கு போனாக்கூட அங்கே போடுற ஸ்லைடுக்கு உங்க கமெண்ட் தாண்ணே வருது. ஏன்னா நீங்க புடிச்சதெல்லாம் எங்க வாழ்க்கைலேர்ந்து.. அப்ப எங்க வாழ்க்கைல உங்க வார்த்தைகதானே வரும்?

இன்னும் எத்தனை வருசம் வாழ்ந்தாலும் உங்க வார்த்தைகளோடத்தான் வாழப்போறோம். இது உங்களுக்கு பெருமை தானே… அவார்டெல்லாம் வேணாம்ணே… காலகாலத்துக்கும் நிலைச்சு வாழப்போறீங்க… இதைவிட என்னண்ணே அவார்டு வேணும்?

சூனா பானா, கைப்புள்ள, அலார்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், வண்டு முருகன், என்கவுண்டர் ஏகாம்பரம், கீரிப்புள்ள, படித்துறை பாண்டி, நாய் சேகர், வீரபாகு, மொக்கசாமி, டெலெக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா இதெல்லாம் வெறும் சினிமா கதாபாத்திரங்கள் இல்லண்ணே.. எங்க கூடவே வாழுற கேரக்டர்கள். எங்களுக்கு எப்பப்பல்லாம் தேவைப்படுதோ அப்பப்பல்லாம் வந்து எங்களை அறியாம எங்க மூலமா எங்களை சுத்தி இருக்கறவங்கள சிரிக்க வைப்பாங்க…

சரி.. விஷயத்துக்கு வாரேன்… என்னண்ணே ஆச்சு உங்களுக்கு? வேலில போன ஒணானை புடிச்சு வேட்டிக்குள்ள விட்ட பாலிடிக்ஸ் கதைலாம் இப்ப வேணாண்ணே… போன வருஷம் அந்த கடைலாம் இழுத்து மூடிட்டு திரும்ப சினிமாவுக்குள்ள வந்தீங்கள்ல… அப்புறம் என்னண்ணே ஆச்சு?

இம்சை அரசன் இரண்டாம் பாகம்னாங்க… அதுல நீங்க சம்பளம் அதிகம் கேட்டதால தகராறு. நிக்குதுங்கறாங்க… ஜிவி.பிரகாஷ், ஆர்கே கூட நடிக்கப்போறதா வந்த படங்கள்லயும் நீங்க இல்லன்னு தகவல் வருது… காரணம் சம்பளப் பிரச்னைங்கறாங்க… கதைல அதிகமா தலையிடறீங்கங்கறாங்க…

யார் நடிச்சாலும் நீங்க தாண்ணே ஹீரோ. ஆனா பிரியாணியை வெறுமனே சாப்பிட முடியுமா? அதுக்கு கத்திரிகா சால்னா, பச்சடின்னு ஏதாவது இருந்தா தானேண்ணே பிரியாணி டேஸ்டு தெரியும்? அதை விட்டுட்டு கதைல எல்லா ஸீனும் நானும் இருப்பேன்னு அடம் புடிச்சா எப்படி? பத்து வருசத்துக்கு ஒரு தடவை சினிமா ட்ரெண்ட் மாறும்பாங்க… உங்க காமெடிலயே எத்தனை மாற்றங்கள் வந்துருக்கு.

இனிமேலும் நீங்க அடி வாங்கினாலோ அவ்வ்… சொன்னாலோ சிரிப்பாங்கன்னு சொல்ல முடியாது. கத்திச்சண்டைல உங்க காமெடிக்கு தியேட்டர் ரியாக்‌ஷன் பார்த்துருந்தீங்கண்ணா புரிஞ்சுருக்கும்.

உங்ககூட சிங்கமுத்து, சிங்கம்புலி, தம்பி ராமய்யாலாம் இருந்தாங்க.. ஜெயிச்சீங்க… இப்ப அப்படி ஒரு நல்ல டீமை ஃபார்ம் பண்ணுங்க…

உங்ககிட்ட இருக்கற பிரச்னை என்ன தெரியுமா? எம்ஜிஆர் ரசிகனான நீங்க எம்ஜிஆராவே நினைச்சுக்குறீங்க… அண்ணே நீங்க எம்ஜிஆர் தான்.. சிரிப்பு எம்ஜிஆர்.

நமக்கு வேலை ஆடியன்சை சிரிக்க வைக்கிறது. அதுக்கு எல்லாரும் ஏங்கிட்டுருக்காங்கண்ணே… தயவுசெஞ்சு ஈகோவெல்லாம் விடுங்கண்ணே… ச்சே… உங்களுக்கு அட்வைஸ் சொல்றேன் பாருங்க… எதுவும் சொல்லலண்ணே… ஆனா ஒண்ணு மட்டும் அடிச்சு சொல்றேண்ணே… நீங்க திரும்ப வர்ற வரைக்கும் இந்த சினிமா இப்படியே தரிசாத்தான் கெடக்கும்.

– ஆர்ஜி

tamil.filmibeat.com