நான்கைந்து ஆண்டுகள் வடிவேலு காமெடியைக் காணாமல் காய்ந்து கிடந்த தமிழ் சினிமாவுக்கு இன்று கொண்டாட்ட நாளாக அமைந்துள்ளது.
சிவலிங்காவில் வடிவேலுவின் காமெடிதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. படம் பார்த்த பலரும், ‘கைப்புள்ள வடிவேலுவை நம்பி போனோம்… அவர் கைவிடவில்லை’ என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடித்துள்ள இந்தப் படத்தை ட்ரைடன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. லாரன்ஸ் திரையுலக வரலாற்றிலேயே அதிகபட்சமாக 1400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது (தமிழகம் மற்றும் உலகெங்கும்).
படம் ஒரு ஹாரர் காமெடி ரகம். எனவே சந்திரமுகி மாதிரி இந்தப் படத்திலும் வடிவேலுவை பிரதான காமெடியனாக நடிக்க வைத்துள்ளார் பி வாசு. இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது வடிவேலுவின் காமெடி.
அவரும் பழைய ஹீரோ கனவையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இறங்கி வந்து காமெடி செய்திருக்கிறார். அதற்கான பலனை திரையரங்குகளில் காண முடிகிறது. மக்கள் வடிவேலுவின் காமெடியை அப்படி ரசிக்கிறார்கள்.
விஜயகாந்த் Vs வடிவேலு என்றான பிறகு, வடிவேலு திரையில் வந்தாலும் பெரிய அளவில் அவரது காமெடிகள் ரசிக்கும்படி இல்லை.
அவர் நாயகனாக நடித்த தெனாலிராமன், எலி, மீண்டும் காமெடியனாக தலைகாட்டிய கத்தி சண்டை போன்ற படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. அந்தக் குறையை ஈடுகட்டியுள்ளது சிவலிங்கா என்பதே ரசிகர்கள் தீர்ப்பு.
வைகைப் புயலே… இந்த தமிழ் சினிமாவை புரட்டிப் போட மீண்டும் வருக!!