மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி பற்றி பலரும் அறியாத நெகிழ வைக்கும் உண்மைகள்!!

Vinu Chakravarthyமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, படகா போன்ற 4 மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, கெட்ட குணமுடைய (எதிர்நாயகன்) வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.

இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார்.

வினுசகரவர்த்தி நடிகர் என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த விஷயம். தெரியாத விஷயங்களில் முக்கியமானது அவர் ஒரு நல்ல கதாசிரியர்.

வண்டிச்சக்கரம் படத்தின் கதை வசனம் இவர்தான். தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிப் புயலாய் நுழைந்த சில்க் ஸ்மிதாவை சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதாவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒரு முறை சில்க் ஸ்மிதா மனம் திறந்து ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் “என்னிடம் மிக நேர்மையாக பழகியவர்களில் நான் குருவாக மதிக்கும் வினுசக்கரவர்த்தியும் ஒருவர். என்னை ஒருநாளும் அவர் தவறாக அணுகியதே இல்லை “. என்றார்.

இந்த விஷயம் வெளியானதும் வினுசக்கரவர்த்திக்கு போன் செய்து பாராட்டியவர்கள் அதிகம் பேர்.

அதற்கு சிரித்த வினுசக்கரவர்த்தி “இது என்ன பாராட்டுக்குரிய விஷயமா.. நாம் ஒரு பெண்ணிடம் அப்படிதானே பழக வேண்டும்”. என்று சொல்லி அசர வைத்தார்.

ஒரு நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் மரணித்தார் என்பது தான் சோகம்.

-manithan.com