ஹைதராபாத்: பாலிவுட்டில் பாகுபலி போன்ற படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் அங்கு பட்ஜெட்டில் பெரும் பகுதியை நடிகர் சாப்பிட்டுவிடுவார்கள் என சவுண்டு என்ஜினியர் பி. எம். சதீஷ் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படத்தின் சவுண்டு என்ஜினியராக பணியாற்றிவர் தேசிய விருது பெற்ற பி.எம். சதீஷ். 20 ஆண்டு காலமாக திரையுலகில் இருக்கும் அவர் தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் பாலிவுட்டில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் பாகுபலி மற்றும் பாலிவுட் பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பாலிவுட்
பாலிவுட்டில் ஒழுங்கு இல்லை. தெலுங்கு சினிமாவில் பாகுபலி எப்படி சாத்தியமானது? காரணம் அங்கு பெரும்பாலான பணம் தயாரிப்புக்கு செல்கிறது. சில நடிகர்கள் பெரும் பகுதி பணத்தை ஏப்பம் விடுவது இல்லை.
மும்பை
மும்பையில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் அதில் அதிகபட்சமாக ரூ. 100 கோடி மட்டுமே தயாரிப்புக்கு செல்லும். பெரும்பகுதி சில நடிகர்களுக்கு சென்றுவிடும்.
பாகுபலி
பாகுபலி படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி தயாரிப்புக்கு சென்றுள்ளது. நடிகர், நடிகைகளுக்கு கொஞ்சம் தான் அளிக்கப்பட்டது. பாலிவுட்டில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட போராட வேண்டியுள்ளது.
சவுண்டு பட்ஜெட்
பாகுபலி படத்தின் சவுண்டு பட்ஜெட்டை மட்டும் கேட்டாலே பாலிவுட்காரர்கள் மயங்கிவிடுவார்கள். ஏனென்றால் தரத்திற்காக அவர்கள் அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய மாட்டார்கள்.
தயாரிப்பாளர்
தரம் நன்றாக வர வேண்டும் என்று பாகுபலி தயாரிப்பாளரிடம் எதை கேட்டாலும் கேள்வி கேட்காமல் செய்தார். ஆனால் பாலிவுட்டில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட போராட வேண்டும் என்றார் சதீஷ்.
-filmibeat.com