நானெல்லாம் தெலுங்கனே… 44 வருஷம் தமிழ்நாட்டில் இருந்தால் ரஜினி தமிழனா? ராதாரவி அதிரடி

radha-raviசென்னை: வெள்ளைக்கரன் 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று கூற முடியுமா? 44 வருடங்கள் தமிழகத்திலிருந்தால் ரஜினி பச்சைத் தமிழனா? என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ராதாரவி ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் கருணாநிதி வைர விழா, ரஜினி அரசியல் பிரவேசம், ஜெயலலிதாவின் மரணம்குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். நடிகர் ராதா ரவியின் சிறப்பு பேட்டி உங்களுக்காக…..

கேள்வி: கருணாநிதிக்கு வைரவிழா கொண்டாடப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கருணாநிதிக்கு தொடர்ந்து வெற்றிகரமாக 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கிறார். இதனை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சட்டமன்றத்தை கூட்டி கொண்டாடி இருக்க வேண்டும். இதை பதிவு பண்ணக் கூடாது எனபதற்காக சட்டமன்றத்தை ஒத்திவைப்பது முட்டாள்னம். காரணம் இவர்களால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடமுடியவில்லை. அதனால் கருணாநிதியின் வைரவிழாவையும் சட்டமன்றத்தில் பதிவு செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள். இன்னொரு காரணம் அதிமுக பிரிந்து கிடக்கிறது. அடல்ஸ் ஒன்லி என்று குறிப்பிடுவது போல ‘ஏ’- அதிமுக என்று குறிப்பிடும் நிலைமைக்கு வந்துள்ளார்கள். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கிறார்கள்.

ஜனாதிபதியாகியிருக்க முடியும்

கருணாநிதி அருமையான தலைவர். எதிர்க்கட்சி மேடையில் இருந்த போதும் கூட நான் அவரை மரியாதையாகவே கூப்பிடுவேன். அவர் மொழியை காப்பாற்றினார். யார் மொழியை காப்பாற்றுவார்களோ அவர் தான் கலாச்சாரத்தை காப்பாற்றுவார்கள். கருணாநிதி நினைத்திருந்தால் ஜனாதிபதி கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் 60 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்காக உழைத்தார்.

ஸ்டாலின் புகழாரம்

ஜெயலலிதா மறைந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் ஜெயலலிதாவை சரியாகப் புகழ்ந்தார். அவர் நினைத்திருந்தால் பொடி வைத்துப் பேசியிருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. ‘உங்களை ஆள வேண்டாம் என்றுதான் சொன்னோம்; வாழ வேண்டாம் என்று சொல்லவில்லை’ என பெருந்தன்மையான வாசகங்களைக் கூறினார்கள். அதே நாகரீகம் எதிர்த்தரப்பிலும் இருக்க வேண்டும். கருணாநிதியின் வைரவிழாவை பதிவு செய்யாமல் இருப்பது அதிமுகவின் பலவீனம்!

சட்டசபையில் பதிவு

கருணாநிதியின் வைரவிழாவை இந்நேரம் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்குள் பதிவு செய்துவிடுவார்கள். அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை தடுப்பதன் மூலம் அவர்களின் பலம் கூடும் என்று. ஆனால் அதைத் தடுக்க தடுக்க நீங்கள்பலவீனம் அடைவீர்கள். காரணம் ஏற்கனவே மக்கள் அவர்கள் மீது கோபமாக உள்ளார்கள். வைரவிழா கொண்டாடாமல் இருப்பது அதிமுகவுக்குத்தான் கேவலமே தவிர கருணாநிதிக்கு அல்ல.

ஜெ. மரணம்

கேள்வி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும், மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும்,போட்டோக்களை வெளியிட வேண்டும் என அதிமுகவின் ஒரு தரப்பு கேட்டுக்கொண்டிருக்கிறதே…

இதை பற்றி….? நான் இப்போது அதிமுகவில் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதை அவர்களே கேட்டுக்கொண்டு உள்ளார்கள். ஆனால் இதை ஏன் இப்போது கேட்கிறீர்கள். ஏன் முன்கூட்டியே கேட்கவில்லை என்பதுதான் என் கேள்வி. ஒபிஎஸ் முதல்வராக இருந்த போதே கேட்டு இருக்கலாம். ஆனால் எடப்பாடியை கேட்க முடியாது. அப்போது அவர் தேர்ட் ரேங்க் அமைச்சராகத்தான் இருந்தார்.

டிஸ்சார்ஜ் சம்மரி

அட்மினிஸ்ட்ரேஷனில் ஃபோர்த் ரேங்க் அமைச்சராகத்தான் எடப்பாடி இருந்தார். எனவே அவருக்கு பதில்சொல்லத் தெரியாது. சாதாரண பாமர மக்களுக்குக் கூட ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உண்டு. அப்பல்லோ ஆஸ்பத்திரியிலிருந்து அவர் வெளியே கொண்டுவரப்படும்போதே அவர்கள் டிஸ்சார்ஜ் சம்மரி கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதை தரவில்லை என்றவுடன் தான் வீடியோ வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் அவர்களோ ஜெயலலிதா எடுக்கக்கூடாது என சொல்லிவிட்டார் என்கிறார்கள். டிஸ்சார்ச் சம்மரியுமா கொடுக்கக் கூடாது என்று சொன்னார் ஜெயலலிதா? ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் பதில்சொல்ல வேண்டும்.

இதனால்தான் சந்தேகம்

75 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அவரை யாருமே பார்க்கவில்லை. யாராவது பார்த்திருந்தால் இந்த சந்தேகம் வராது. ஆனால் ஜெயலலிதா நலமாக இருக்கிறார், சாப்பிடுகிறார் என இவர்கள் தான் சொன்னார்கள். காவேரி பிரச்சனை குறித்துப் பேசினார் என்றார்கள். இடைத்தேர்தல் படிவத்தில் அவர்தான் கையெழுத்துப் போட்டார்கள் என கூறினார்கள். அதனால் தான் இதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அவரை வைத்து சம்பாதித்தவர்கள் என அனைவரும் இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஜெ. சமாதிபடுத்தும்பாடு

அதனால்தான் ஜெயலலிதா சமாதியில் போய் மூன்று முறை அடித்த சசிகலா இன்று உள்ளே இருக்கிறார். சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியில் இல்லை. எடப்பாடியார் சமாதியில் ஃபைலை வைத்து வணங்கி முதல்வரானார். அடுத்து கட்சி சின்னம் முடக்கப்பட்டது. தீபா சமாதிக்குப் போனார். அவருடைய கணவர் வேறு கட்சி ஆரம்பித்துவிட்டார். இப்படி இவர்கள் கேவலப்படுவதற்குக் காரணம் அந்த சமாதி கண்டிப்பாக எல்லாரையும் பழி வாங்கும் என்பதுதான். அது எல்லாரையும் பழிவாங்கும்.

ரஜினியின் அரசியல்

கேள்வி: ரஜினி உங்கள் நண்பர்… அவர் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்த்களா?

பதில்: வந்தால்… போனால்… என்று இருக்கக் கூடாது. அவர் வருவேன் என உறுதியாகச் சொல்லட்டும். அவர் நல்லவர். அவரை ஏன் பத்திரிகைகள் இப்படி சீண்டுகின்றன. எல்லாரும் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவரும் ஆரம்பித்துவிட்டு போகட்டுமே. அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருக்கிறது. புரட்சி தலைவர் ரசிகர் மன்றங்களை இயக்கமாக மாற்றினார். அதேபோல்ரஜினியும் அவ்வாறு செய்யலாம். விஜயகாந்த் கூட அப்படித்தான் செய்தார். அதனால் ரஜினியும் விஜயகாந்தை ஃபாலோ பண்ணலாம். நான் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

திமுகவை திட்டி வளருங்க

திமுகவிலிருக்கும் என்னால் அவரை வரவேற்க முடியும். அவ்வளவுதான். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு பத்திரிகை கொடுத்து அழைத்தார். கருணாநிதி வாழ்த்தி அனுப்பினார். இப்போது ரஜினி அழைத்தாலும் வாழ்த்தித்தான் அனுப்புவார். ஆனால் கருணாநிதியை, திமுகவைத் திட்டித்தான் எல்லாரும் வளர்வார்கள்.

ஸ்டாலினுக்கு பாராட்டு

கேள்வி: ரஜினி ஸ்டாலினை நல்ல அட்மினிஸ்ரேஷன் செய்யக் கூடிய தலைவர் என்று சொல்லியிருக்காரே?

பதில்: ரஜினி அப்படி கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு 67 வயதாகிறது.இதை ஒரு வாழ்த்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்லவர்கள், வல்லவர்கள் என ரஜினி குறிப்பிட்ட நிறைய பேர் அரசியலில் இருக்கும்போது இவர் எதுக்கு அரசியலுக்கு வருகிறார் என்பதும் என் கேள்வி. இருந்தாலும் அவர் வரட்டும்.

தமிழக மக்களிடம் தான் சம்பாதித்தேன் என கூறிகிறார். அப்படியென்றால் தமிழக மக்களுக்கே அவர் செலவு செய்யட்டும். அதில் தவறு இல்லையே. மேலும் அவர் 44 வருஷம் தமிழ்நாட்டில் இருந்தேன். அதனால் அவர் தன்னை பச்சைத் தமிழன் என்கிறார்.

நான் தெலுங்கன்..

ரஜினிக்கு ஏன் பயம் வெள்ளைக்காரன் கூட 200 வருஷம் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று சொல்ல முடியுமா? இவர் ஏன் பயப்படுகிறார்?. நான் தைரியமாகச் சொல்வேன், நான் தெலுங்குதன் என்று. என் தந்தையார் தி.கவில் இருந்து மக்களுக்காகபேசியவர் உழைத்தவர் என்றாலும் நாங்கள் தெலுங்கர்கள் தான். ரஜினி ஏன் பச்சை தமிழன் என கூறுகிறார். அதனால் தானே இணையத்தில் அவரை விமர்சிக்கிறார்கள். இவ்வாறு நடிகர் ராதா ரவி கூறினார்.

tamil.oneindia.com