தாய் மொழியை மதிக்காமல் பச்சை தமிழன் என சொல்வதா.. கர்நாடகாவில் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு

rajini455சென்னை: நான் பச்சை தமிழன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ஊடகங்களும், கன்னட அமைப்புகளும், அவரது பேச்சை கடுமையாக விமர்சனம் செய்கின்றன.

சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட, நடிகர் ரஜினிகாந்த், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்படி பேசும்போது, ரஜினிகாந்த் தன்னை பச்சை தமிழன் என அறிவித்துக்கொண்டார்.

நான் கர்நாடகாவில் 23 வருடம் இருந்தேன். 44 வருடகாலம், தமிழகத்தில் உள்ளேன். என்னை நீங்கள் தமிழனாக மாற்றிவிட்டீர்கள். தமிழகத்தை தவிர வேறு எங்கும் நான் போக மாட்டேன். அப்படியே என்னை போகச்சொன்னால், சித்தர்கள் வாழும் இமயமலைக்குத்தான் போவேன் என்றார் ரஜினி.

கர்நாடகாவில் அதிர்வலை

இந்த நிலையில் ரஜினிகாந்த் பேச்சு, கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீடியாக்களை, ரஜினி கர்நாடகாவை குறைத்து மதிப்பிட்டு பேசிவிட்டதாக அங்கு செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.

ஜெய் கர்நாடகா எதிர்ப்பு

ஜெய் கர்நாடகா என்ற கன்னட அமைப்பின் நிர்வாகி ஜெகதீஷ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகாவில் பிறந்தவர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். பல தொழில்களில் கன்னடர்கள் சாதனை படைத்துள்ளனர். கர்நாடகாவில் பிறந்தவர் இவர். எனவே அவர் கர்நாடகாவுக்குதான் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிற மொழிக்கு முக்கியத்துவமா?

மேலும் அவர் கூறுகையில், பிறந்த மாநிலத்தை மதிக்க வேண்டும், மறக்க கூடாது. சொந்த மொழியை தவிர்த்து, வேறு ஒரு மொழிக்கு முன்னுரிமை கொடுத்திருக்க கூடாது. பிறந்து வளர்ந்த நிலம்தானே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அது இல்லாமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கன்னடர் என்ற மொழி உணர்வுதான் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ரஜினி, இப்படி பேசியிருக்க கூடாது என்றார்.

அரசியலுக்கு வருவது நிச்சயம்

கன்னட செய்தி சேனல்கள் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என செய்தி ஒளிபரப்பி வருகின்றன. சில சேனல்கள் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முற்பட்டன. ஆனால் அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

tamil.oneindia.com