தமிழ் சினிமாவின் தரங்கெட்ட வரம்

மராத்தி, பெங்காலி, மலையாளம், போஜ்பூரி என பல மொழிகளிலும் வாராவாரம் ஆராவராமாய் ஆர்ப்பரிக்க கூடிய நல்ல படங்களை எடுக்கிறார்கள் அம்மாநில படைப்பாளிகள். அதற்கான ரசனைகளையும் சமூக பங்களிப்புகளையும் அவர்கள் கலையின் வாயிலாக மக்களிடம் விதைக்கிறார்கள்.ஆனால் தமிழ் சினிமாவிலோ நல்லதாய் ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தால், ஏன் அப்படி நினைத்தோமென உணருமளவிற்கு அலைகழிக்கப்படுவதும், அதையும் மீறி ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டால் ஏன்டா எடுத்தோமென விரக்தியாகி சிந்திக்குமளவில் தான், தமிழ் திரையுலகம் மக்களுக்கான படைப்பாளிகளை தலையில் கொட்டியும், எட்டி உதைத்தும், வைத்திருக்கிறது.

 

தமிழ் திரையுலகில் நல்ல பொழுதுபோக்கு படங்கள் எடுக்கப்படுகிறதோ இல்லையோ, சிறு படங்களையும், அது சார்ந்தோர்களையும் நசுக்கி புறந்தள்ளி மகிழ்வதை ஆகச்சிறந்த பொழுதுப்போக்காக வைத்திருக்கிறது, வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயர் லோக்கலாக இருக்கு.எங்கள் திரையரங்க பெயர் களங்கப்பட்டுவிடும், என்றெல்லாம் காரணம் கூறி, ஒரு திரைப்படம் திரையிட மறுக்கப்படுகிறதென்றால் அதன் பெயர் தமிழ்த் திரையுலகம் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

அவள் அப்படித்தான் ருத்ரய்யா,முதல் மதுபானக்கடை கமலக்கண்ணன், உறியடி விஜயகுமார், யாக்கை குழந்தைவேலப்பன், பாம்புசட்டை ஆடம்தாசன், வெங்காயம் சங்ககிரி ராச்குமார்கள் போன்று, சமூகத்தின் மீது கோபங்களுடன் வந்த எந்த இயக்குனர்களையும் இச்சமூகம் காயப்படுத்தாமல் விடுவதேயில்லை. படைப்பாளிகள் எனும் போர்வைகளில் பதுங்கிகொண்டு, தனது பேனாவை நம்பாமல் சதையை நம்பியும்,சாதியை நம்பியும் படைப்புகள் என்ற பெயரில் விஷமங்களை தூவுவோரை தூக்கிவைத்து கொண்டாடும் இதே சமூகம், சமூக கோபங்கள் கொண்ட படைப்பாளிகளிடம் உறவாட விரும்புவதேயில்லை. உறவடாவே விரும்பாத சமூகம் அவர்களை உயர்த்தி பிடிக்குமென நம்புவது பெரும் அபத்தம் தான். சொந்த காசைபோட்டவர்கள் சோத்துக்கு வழியின்றி திண்டாடுவதும்,சொப்பன சுந்தரிகளை வைத்து படமெடுப்பவர்கள் சொகுசாய் வாழ்வதும் தமிழ் திரையுலகில் வரம் போலும்.

சமீபமாக நிறைய படைப்பாளிகளின் ஆதங்கங்கள் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. தயாரிப்பாளர் இருந்தும் நாயகர்களின் அலைக் கழிப்பிற்காய் தன்னையே காவுதந்த எனது அன்புத் தோழர், போகும்போது நாளைய இயக்குனர்களுக்கு நிறையவே சொல்லி சென்றிருக்கிறார். மட்டுமின்றி சில நாட்களுக்கு முன் “யாக்கை” இயக்குனரிடம் பேசியபோது அவரிடம் வெறுமையும் ஆதங்கமும் தான் இருந்தது. அடுத்த சிலநாட்களில் “வெங்காயம்” படமெடுத்த இயக்குனர் ராஜ்குமாரின் முகநூல் பதிவும் அதையேதான் பிரதிபலிக்கிறது. அந்த பதிவிலிருந்து இன்றளவும் மீளமுடியவில்லை. அவரது ஒவ்வொரு வரிகளும் பகிரமுடியாத வலிகளை சுமந்திருந்தது.

வலிகளால் நிரம்பிய அவரது பதிவு….!

“நெடும்பா” திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது,முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது, அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் வெங்காயம் திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து, இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்னறை ஆண்டுகள் கடந்து விட்டது.அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்த போது உயர்மதிப்பு நோட்டு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளால் தொடர்ச்சியாக தள்ளி போய்கொண்டே இருந்தது.அதற்காக காத்திருந்த நாட்களை ஒன் படத்திற்காக செலவிட்டு சரி செய்து கொண்டிருந்தேன்

நெடும்பா படத்திற்கான உழைப்பு மிகக்கடுமையானது, 500 ஆண்டுகளாக வெளியுலக மக்களை பார்க்காத ஒரு இனம் பற்றிய கதை. தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மலை கிராமங்களுக்கு பயனித்து,ஆயிரக்கனக்கான பழங்குடி மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டு எழுதப்பட்ட கதை திரைக்கதை.பல வேற்று மொழிப்படங்களையும் பார்த்தோம் எதற்கென்றால், எந்த இடத்திலும் மற்ற படங்களின் சாயல் எதேச்சையாக கூட வந்துவிடக்கூடாது என்பதற்க்காக..கிட்டத்தட்ட 300 பேரின் கடின உழைப்பு.

இந்த தாமதத்திற்க்கான முழு காரணம் நான் தான்,ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்க்கு எந்த வித தகுதியும் இல்லாத நான் இதை தயாரித்திருக்க கூடாது.கருத்து,கதையமைப்பு,காட்சியமைப்பு, என சிந்தித்து கொண்டிருந்த என்னை கடன்,வட்டி,தவணை, என சிந்திக்க வைத்து சிதைத்துக்கொண்டிருக்கிறது இந்தப்படம்.இது நான் தயாரிக்கும் கடைசி படம்.யாராவது என்னை கடத்தி கொண்டு போய் வைத்து என் உடல் முழுக்க வெடிகுண்டை சுற்றி வைத்து அதன் ரிமோட்டை கையில் வைத்து கொண்டு ,அடுத்த படமும் உன் சொந்த தயாரிப்பில் தான் செய்ய வேண்டும் இல்லையென்றால் பட்டனை அமுக்கி விடுவேன் என்று சொன்னால்,அந்த ரிமோட்டை பிடுங்கி நானே அமுக்கிக்கொண்டு செத்துவிடுவேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான ஒரு படத்திற்க்கு சேலம் ஏரியாவில் மட்டும் 25 செண்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டிருக்கிறது. அதே போல் தான் தமிழகம் முழுவதும்.அந்த படத்தின் பெயர் “பச்சைக்கிளி கனகா”.பேசாமல் பெயரை மாற்றிக்கொண்டு அப்படி ஒரு படத்தை எடுத்து பிரச்சனைகளை தீர்த்துவிடலாமா என்று கூட யோசித்துவிட்டேன்.சமீபத்தில் பத்திரிக்கைகளின் பாராட்டை பெற்ற நிசப்தம் படம் ஹோப் படத்தின் தமிழ் வடிவம் என தெரிந்த போது,ஒரு படத்திற்க்காக நாம் எவ்வளவு முட்டாள் தனமாக உழைத்திருக்கிறோம் எனநினைக்கும் போது ஒரு விரக்தி ஏற்படுகிறது.

001அலம்பல்களை ரசிக்க பழகிய மக்கள் மத்தியில் புலம்பல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்வேன். இன்று வரை வெளியீடு தொடர்பான போராட்டம் தொடர்கிறது.சமீபத்தில் இதே களம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.பெரிய நடிகர்கள்,பெரிய பட்ஜெட்,பெரிய விளம்பரம் செய்யபடும் அந்த படங்கள் இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கும் நெடும்பாவிற்கு முன்னதாகக்கூட வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது.அதற்கு பிறகு நெடும்பா வருமேயானால் “இதே மாதிரி ஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு” என்றோ அல்லது “அந்த படத்த பாத்து காப்பி அடிச்சுருக்கான்” என்றோ நீங்கள் கமெண்ட் அடித்து விட்டு போகும் தருவாயில், நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன்.

இதை வெறும் முகநூல் பதிவாக கடந்துசெல்ல என்னால் இயலவில்லை. அதே சமயம் என்னால் வேறெதுவும் செய்யவும் இயலாத சூழல். ஏனெனில் நானும்கூட சிலந்தியும் ஈயும் என்ற கதையோடு எட்டு தயாரிபாளர்களை சந்தித்து புறக்கணிக்கபட்டவன். என்னையும் என் போன்றவர்களையும் புறக்கணித்தவர்களுக்கு தேவை குத்துபாட்டுகளும், சதைகளும் விரவிய சினிமாதான் தேவையாயிருக்கிறது. ஆனால் பக்கத்துக்கு மாநில படங்கள் கொண்டாடப்படும் போது மட்டும் இங்கு ஆட்களே இல்லாதது போல சலித்துக் கொள்வார்கள். ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கையில் தான் நானும் என் போன்றோர்களும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நல்ல படைப்பாளிகளின் சிந்தனைகள் எதை நோக்கி செல்ல வேண்டுமோ, அதை தகர்த்தெறிந்து, அதற்கு நேர்மாறாக வேறெங்கெங்கோ அவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அதற்காய் வெட்கித் தலைகுனிந்தாலும் குனியலாம். இல்லை குத்தாட்டம் போட்டாலும் போடலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இதெல்லாம் தெரிந்தும் ஒரு மனிதனால் அப்படியொரு வலிகளை வரிகளாக்கி எழுதமுடிகிறதென்றால், நிச்சயம் அவன் திடமான மக்களுக்கான படைபாளியாகத்தான் இருக்க முடியும். மக்களோடு மக்களாய் நின்று இரட்டைவேடம் போட்டு சம்பாதிக்கும் இரண்டாந்தர படைப்பாளிகளை தோள்களில் சுமக்கும் சமூகம், ராஜ்குமாருக்கும் ராஜ்குமார்களுக்கும் என்ன பதில் வைத்திருக்கிறது.

ஒரு கலைஞனை காப்பாற்றி கலைமகளிடம் ஒப்படைப்பதும் கைவிட்டு காட்டு வேலைக்கு அனுப்புவதும் காலத்தின் கையில் ஆனால் எங்கிருந்தாலும் கலைஞனாக மட்டுமே அவனால் இயங்கமுடியும்.

– ஜெபி.தென்பாதியான்.