சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பது நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
நக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அசியல் பிரவேசம் செய்தால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் மொத்தம் பத்தாயிரம் பேரை சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது.
அதில் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா என்ற ஒரு கேள்வி பிரதானமாக முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் அளித்துள்ள பதில்களை பாருங்கள்.
ஆதரவு
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை 29 சதவிகிதம் மக்கள் ஆதரிக்கிறார்கள். மற்ற 70 சதவீதம் நேரடியாக ஆதரவு அளிக்கவில்லை, அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே பெரும்பான்மை மக்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கருதவில்லை.
ரஜினி பேச்சு
‘திராவிட கட்சிகளுக்கு மாற்று’ என உருவான கட்சிகளை விட ரஜினி பேசிய அரசியல் பேச்சு பெரிய அளவில், சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதை உணர முடிந்தது என்கிறது அந்த சர்வே.
பெண்களிடம் மவுசு
சர்வேயில் பங்கேற்றதில், 28 சதவிகிதம் பேர் ‘நாங்கள் ரஜினி ரசிகர்கள்’ என வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளனர். அதிலும் பெண்கள் மத்தியில் ரஜினிக்கு இன்னும் மாஸ் இருக்கிறதாம். ரஜினி 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தபோதே அரசியலில் குதித்திருந்தால் இப்போது முதல்வராகியிருக்கலாம் என்பது பெரும்பான்மையோர் கருத்தாக உள்ளது.
திமுகவுடன் கூட்டணி
ரஜினி தனியாக போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது, அவர் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்’ என 23 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், “தனிக்கட்சியே ரஜினிக்கு நல்லது. பாஜக போன்ற கட்சிகளின் வலையில் விழுந்து விடக்கூடாது’ என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டதாக கூறுகிறது அந்த இதழ்.
ரஜினி தமிழர்
“ரஜினி தமிழரல்ல என விமர்சிக்கப்படுவது தவறு’ என்று 66 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தமிழர் என்ற அடிப்படையிலான வாதத்திற்கு இன்னும் பெரும்பான்மை மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
பாஜக மீது சந்தேகம்
பாஜகதான் ரஜினிகாந்த்தை தமிழக முதல்வராக்கிப் பார்க்கணும்கிற வேகத்தில் மறைமுகமாக வேலை செய்கிறது என்ற எண்ணம் பரவலாக மக்களிடம் உள்ளது.. மேலும் 30 சதவிகித மக்கள் “அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும்; அப்போது அவரைப் பற்றிய எங்களது நிலையை சொல்கிறோம்” என்கிறார்களாம்.
-nakkheeran.in