மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? (கவிஞர் வாலி நினைவு நாள்)

vaaliதமிழ் இலக்கியப் பாட்டையின் நெடிய வரலாற்றில், கடந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடரும் இந்த நூற்றாண்டிலும் திரைப்படங்களுக்காக புனையப்பட்ட பாடல்கள்தான் இலக்கியம் என்றாகி விட்டது. பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத’ என்று தொடங்கும் பாடல், இலக்கிய நயத்தின் உச்சம். இதைப் புனைந்தவர் கவிப் பெருமகன் கண்ணதாசன். அதைப்போல, திருவிளையாடல் என்ற பக்திப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாட்டும் நானே’ என்று தொடங்கும் பாடலையும் குறிப்பிடலாம்.

‘கூட்டும் இசையும் கூத்தின் முறையும்

காட்டும் என்னிடம் கதைசொல்ல வந்தாயோ’ என்னும் கருத்தாழம் மிக்க வரிகளைக் கேட்டு, போட்டிக்கு வந்த பாணபத்தர், பாண்டிய நாட்டில் போட்டியும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடுவது போல் கதை அமைந்தது ஒருபுறம் இருக்க, அந்தப் பாடலையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்று கவிஞர்களும்  கலை ஆர்வலர்களும் எண்ணியிருக்க, ‘இல்லையில்லை; அந்தப் பாடலைப் புனைந்தது கவி கா.மு.ஷெரிப் என்று தற்பொழுது கருத்தாடல் இடம்பெற்று வருகிறது. இதில் எது உண்மை என்பதை அறிய சம்பந்தப்பட்ட இரு கவிப்பெருமக்கள், அப்பாட்டைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட ஒருவரும் இன்று உயிரோடு இல்லை; இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

vaali1இதைப் போலவே, இரு மலர்கள் என்னும் படத்தில் இடம்பெற்றுள்ள

‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்’ என்று தொடங்கும் பாடலும், காதல் பாடலாக இருந்தாலும் அதில் இலக்கிய நயம் ததும்பும். இந்தப் பாடலையும் கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்று எத்தனையோ பேர் ஆரம்பத்தில் எண்ணியதுண்டு; அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், அந்தப் பாடலை இயற்றியவர் வாலிபக் கவிஞர் வாலி ஆவார். அவருக்கு இன்று(ஜூலை 18) நினைவு நாள்.

டி.எஸ்.ரங்கராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அத்துடன், இவர் திரைப்பட நடிகரும்கூட; திரைப்பட வரலாற்றில் மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாட்டெழுதி வரலாறு படைத்தவர் வாலி; ஆரம்பத்தில் சிவாஜி-எம்ஜிஆர்-ஜெய்சங்கர் வரிசையைத் தொடர்ந்து கமல்-ரஜனி-விஜயகாந்த் என அடுத்தக்கட்ட நடிகர்களுக்காக ஏராளமான பாடல்களை இயற்றிய வேளையில் தொடர்ந்து, சூரியா-விஜய்-அஜீத் என்று மூன்றாம் கட்ட நடிக-நடிகையருக்காவும் பாடல்களை புனைந்தார்.

கோடம்பாக்கத்தின் போக்கிற்கேற்ப தன்னை தக அமைத்துக் கொண்டதால்தான், வாலியால் இப்படி தாக்குப்பிடிக்க முடிந்தது. காதலர் தினம் என்றப் படத்தில் குணாலுக்காக ‘கடலுக்கு ஃபிஷிங் நெட்டு காதலுக்கு இண்டர்நெட்டு’-என்றெல்லாம் அவரால் எழுத முடிந்தது. ஆனாலும் ஒஸ்தி என்னும் படத்திற்காக ‘ஒஸ்தி மாமே’, ‘கலசலா; சலாசலா’ என்றெல்லாம் வாலி  தீட்டிய பாடல்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின.

எது எவ்வாறாக இருந்தபோதும், எம்ஜிஆருக்காக ஏராளமான பாடல்களைப் புனைந்த கவிஞர் வாலியின் புகழ் தமிழ்ச் சமுதாயத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும். 1931-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 29-ஆம் நாளில் திருச்சியில் பிறந்த வாலி, 2013-இல் இதே நாளில் கோடம்பாக்கத்தில் இருந்து  நிரந்தரமாக விடைபெற்றார்.

– ஞாயிறு நக்கீரன்