கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக `தூங்காவனம்’ என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பின்னர் `மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கமல் தற்போது `சபாஷ்நாயுடு’, `விஸ்வரூபம்-2′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார்.
`சபாஷ் நாயுடு’, `விஸ்வரூபம்-2′ படங்கள் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார். அதன்படி கமல் அடுத்ததாக `தலைவன் இருக்கிறான்’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அரசியல் சாயலில் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இதுகுறித்து கமல் கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நான் படத்தில் நடிக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த படத்தில் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். அதற்கான தலைப்பையும் முன்பே பதிவு செய்துவிட்டேன். எனவே இது தற்போதைய முடிவு கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-tamilcinema.news

























