நிபுணன் – திரை விமர்சனம்

சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

அந்த குழுவில் பிரச்சனா, வரலட்சுமி அர்ஜுனுடன் இணைந்து அந்த கொலைகாரனை பிடிக்க உதவி செய்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிறு தயடங்களை கூட அர்ஜுன் கவனமாக சேகரித்து வருகிறார்

. ஆனால் அதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல கொடூர சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை மூலம் இரு கொலைக்கும் தொடர்பு இருப்பதையும், அந்த சீரியல் கில்லரை விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் முடிவு செய்கிறார்.

மேலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் சமயத்தில், மூன்றாவதாக வழக்கறிஞர் ஒருவர் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுன், அந்த சீரியல் கில்லர் அடுத்ததாக குறிவைத்திருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

அந்த முயற்சியில் இறங்கிய அர்ஜுனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனென்றால், அந்த சீரியல் கில்லர், அடுத்ததாக குறிவைத்திருப்பது அர்ஜுனை தான் என்பதையும், அதற்கான காரணம் என்னவென்பதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

தன்னை ஏன் அந்த சீரியல் கில்லர் கொலை செய்ய முயற்சி செய்கிறான்? இதற்கு முன்பாக உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன சம்மந்தம்? என்று அர்ஜுன் தீவிர யோசனையில் இருக்கிறார். இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையும், அவனை கைது செய்தாரா? என்பதே படத்தின் மீதக்கதை.

தனது 150-வது படத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் கதாபாத்திரம் படத்தையே தன்னுடன் கூட்டிச் செல்கிறது. பொதுவாக ஆக்‌ஷன் படங்கள் என்றாலே அர்ஜுன் காட்சிகளுடன் ஒன்றிவிடுவார். அதேபோல் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் வரும் அவரது லுக்கும், உடைகளும் அவரை ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக காட்டுகிறது.

தனது அனுபவ நடிப்பால், சண்டைக் காட்சிகளிலும், கொலையை கண்டுபிடிப்பதிலும் அர்ஜுன் திறம்பட நடித்திருக்கிறார். ஒரு அதிரடியான, சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, தோழனாக இளமையாக நடித்திருக்கிறார்.

அர்ஜுனின் குழவில் ஒருவராக வரும் பிரசன்னா தனது கதாபாத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது உடைகளும், பேச்சும் என ஒரு போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

சீரியல் கொலையை மையமாக வைத்து மாறுபட்ட கதைக்களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லமல் காட்சிகளை கொடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். படத்தில் ஆக்‌ஷன் கிங் நடித்திருப்பது படத்திற்கே கூடுதல் பலம். அர்ஜுனுக்கேற்ற விறுவிறுப்புடன் திரைக்கதையை அமைத்திருப்பதால் படம் ரசிக்கும்படி இருக்கிறது.

அர்ஜுனை மையப்படுத்தி காட்டியிருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. சீரியர் கில்லர் குறித்த சஸ்பென்சை கடைசியில் காட்டியிருப்பது சிறப்பு. அது யார் என்ற சஸ்பென்ஸ், படம் பார்கும் போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி இருக்கும்.

எஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

-tamilcinema.news