கூட்டத்தில் ஒருத்தன் – திரை விமர்சனம்

தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய பேச்சே அடிபடும். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை கண்டுகொள்வதெ இல்லை. இவ்வாறாக ஒரு மிடில் பெஞ்ச் மாணவனாக வருகிறார் அசோக் செல்வன். தனது பிறப்பிலிருந்தே தோல்வியை மட்டுமே சந்தித்த அவருக்கு எதிலும் அதீத ஈடுபாடு இல்லை.

இதுவரை அவரை யாரும் பாராட்டியதும் இல்லை. யாரிடமும் நல்ல பெரை வாங்கியதுமில்லை. அசோக் செல்வனின் தந்தை மாரிமுத்து, அம்மா, தங்கை என வீட்டில் இருப்பவர்கள் கூட அசோக் செல்வனை கண்டுகொள்வதே இல்லை. அவரும் அதை பெரிதாக பொருட்படுத்தாமலே இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கடற்கரைக்கு சென்ற அசோக் செல்வன், கடற்கரையின் அழகுக்கு இழுக்கு ஏற்படுத்தும் குப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறார். இதை பார்த்த பள்ளி மாணவி ப்ரியா ஆனந்த், அசோக் செல்வனை பாராட்ட, இதுவரை பாராட்டையே கேட்டகாத அவரது காதுகளுக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

தனது பள்ளி படிப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கும் பிரியா ஆனந்த், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பத்திரிக்கை துறையில் மேற்படிப்பு படிக்க இருப்பதாக கூற, அசோக் செல்வனும் அதே படிப்பை தேர்வு செய்து, ப்ரியா ஆனந்தின் கல்லூரியிலேயே சேர்கிறார். அங்கு பாலசரவணனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்துகிறார். டாப் பெஞ்சரான ப்ரியா ஆனந்த் தன்னை காதலிப்பதற்கு முன்பாக எதையாவது சாதித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்கிறார்.

இதனால் வருத்தத்துடன் செல்லும் அசோக் செல்வன், கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது அங்கு உயிருக்கு போராடும் குழந்தை ஒன்றை காப்பாற்றுகிறார். அசோக் செல்வன் குழந்தையை காப்பாற்றுவதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கிறார்.

இந்நிலையில், சென்னையின் பிரபல ரவுடியான சமுத்திரக்கனி அந்த வீடியோவை பார்த்து, தனது மகனை காப்பாற்றிய அசோக் செல்வனுக்கு உதவி செய்கிறார். மேலும் ப்ரியா ஆனந்துடன், அசோக் செல்வனை சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். இதையடுத்து சமுத்திரக்கனியின் உதவியால் அசோக் செல்வன் பேசப்படும் சில காரியங்களை செய்கிறார். இதையடுத்து ப்ரியா ஆனந்த்தும், அசோக் செல்வனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

ஒருகட்டத்தில் அசோக் செல்வன், தனது சொந்த முயற்சியில் அந்த காரியங்களை செய்யவில்லை என்பது தெரிய வர, ப்ரியா ஆனந்த், அசோக் செல்வனை விட்டு பிரிகிறாள். இந்நிலையில், பிரியா ஆனந்த்துக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்படுகிறது.

ப்ரியா ஆனந்த் அவரது வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணந்தாரா? அசோக் செல்வனுடன் மீண்டும் இணைந்தாரா? அசோக் செல்வன் தனது அந்தஸ்தை உணர்த்தினாரா? வெற்றி கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அசோக் செல்வன் படத்தில் ஒரு மிடில் பெஞ்சராகவே வாழ்ந்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது. சிறப்பான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

ப்ரியா ஆனந்த் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து ரசிக்க வைக்கிறார். ப்ரியா ஆனந்துக்கும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம் தான், அதனை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். சமுத்திரக்கனி ஒரு ரவுடியாக, அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். பால சரவணன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். மாரிமுத்து, அனுபமா குமார், ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கு ஏற்ப முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

மிடில் பெஞ்ச்சர்கள் எப்படி இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள், அவர்கள் சந்திக்கும் அவமானம், கஷ்டம் என அனைத்யைும் காதல், நட்பு என ஒரு கலவையாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல். குறிப்பாக உணவை வீணாக்கக் கூடாது, உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உணவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரு மெசேஜாக பதிவு செய்திருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் விரும்பி கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

-tamilcinema.news