போதை பொருள் வழக்கில் சிக்கும் மேலும் சில நடிகர்கள்: பீதியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் போதை பொருள் பிடியில் சிக்கி தவிக்கிறது. மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் மகன்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் 30 சதவீதம் இளைஞர்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது.

இவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்த கும்பலை போலீசார் சாமர்த்தியமாக பொறிவைத்து பிடித்துள்ளனர். போதை பொருள் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கெல்வினையும், அவனது கூட்டாளிகள் 18 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் தெலுங்கு பட உலகினருக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

நடிகர்-நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைதொடர்ந்தே நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு உள்பட 12 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு விசாரணை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.

முதலாவதாக டைரக்டர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது ரத்தம், நகம், தலைமுடி ஆகியவை சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. நவ்தீப், சார்மி, முமைத்கான் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள். நடிகர் ரவிதேஜா நேற்று விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இவர் தெலுங்கில் வில்லனாகவும் துணை நடிகராகவும் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர். ரவிதேஜாவும் போதை பொருள் கும்பல் தலைவன் கெல்வினும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

போதை பொருள் கும்பலுடன் மேலும் நடிகர்-நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. எனவே முதல் கட்ட விசாரணை முடிந்ததும் மற்ற நடிகர்-நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை வெளியிடவில்லை. இதனால் தெலுங்கு நடிகர்-நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போதை போருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த தெலுங்கு பட உலகினர் தண்டிக்கப்படுவார்கள் என்று தெலுங்கானா மந்திரி பத்மாராவ் எச்சரித்து உள்ளார்.

-tamilcinema.news