நேற்று ஆகஸ்ட் 18, வெள்ளிக்கிழமை மாலை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னணி தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
பெப்சி அமைப்பில் உறுப்பினர்களுடன் மட்டும் அல்லாது வெளி ஆட்களை வைத்தும் படப்பிடிப்பு நடத்துவது சம்பந்தமாக முக்கிய முடிவு எட்டப்படும் என்ற சூழலில் நடைபெற்ற இக்கூட்டம் தலைவர் விஷால் புகழ் பாடும் கூட்டமாக மாறியது.
அசராத செல்வமணி
ரிட்டையர்டு தயாரிப்பாளர்கள் முதல் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் வரை தமிழ் சினிமாவை காக்க வந்த கிருஷ்ணன் எனப் புகழ் பாடினாலும் எதற்காக இந்த அவசர கூட்டம் என்ன முடிவு என்பது தெரியாமலே கூட்டம் முடிக்கப்பட்டது. கூட்டத்தில் மைக் பிடித்த பெப்சி அமைப்பின் தலைவர், தயாரிப்பாளர் ஆர்கே செல்வமணி கர்ஜனை சிங்கமாக மாறினார். குறுக்கீடுகள், கோஷங்கள் எழுந்தாலும் எதற்கும் அசராத செல்வமணி அதிரடி கேள்விகளை எழுப்பினார்.
வரலாற்றுப் பிழை
“16 படங்களை தயாரித்த தயாரிப்பாளராகப் பேசுகிறேன் சினிமா தொழிலில் எங்கு தவறு நடைபெறவில்லை, அதற்காக தயாரிப்பு தொழிலை நிறுத்திவிட முடியுமா? பெப்சி உறுப்பினர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என்பதை சாதனையாகக் கூறுவதைக் கேட்டு வேதனையாக இருக்கிறது. சம்பளம் கூடுதல், தவறுகள் நடக்கிறது என்றால் அதனை சரி செய்ய வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும் அதை விடுத்து அமைப்பையே வேண்டாம் என்று ஒதுக்குவது வரலாற்று பிழையாக மாறும்,” என்றார்.
நடிகர் நடிகைகள் அட்டகாசம்
“படத் தயாரிப்பில் நஷ்டம் ஏற்படுத்திய பெரும்பான்மையான படங்கள் நடிகர்களின் அதிகமான சம்பளங்களால் என்பதை மறுக்க முடியுமா? நடிகைகள் அட்டகாசம், அவர்கள் அழைத்து வரும் உதவியாளர்கள் எண்ணிக்கை இவற்றை உங்களால் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதா? படம் ஓடினால் சம்பளத்தை அதிகரிப்பது போல் ஓடவில்லை என்றால் அந்த நடிகரின் சம்பளத்தை குறைக்க உங்களால் முடியுமா? உங்களை யார் அதிக சம்பளம் கொடுத்து படம் எடுக்க சொன்னது என இங்கு கேட்கப்படுகிறது. மார்கெட்டில் இருக்கும் பொருளைத்தான் வாங்க முடியும் வேறு எங்கு போய் பொருள் வாங்குவது?
தெலுங்கு மாதிரி
நடிகர்களின் சம்பளத்தை ஒரேயடியாக ஏற்ற விடாமல் சமச்சீராக இருக்க தயாரிப்பாளர்கள் ஒற்றுமை இருந்தால் தமிழ் சினிமாவில் அது சாத்தியமே. அதனால்தான் தெலுங்கு சினிமா ஆரோக்கியமாக, வளமாக இருக்கிறது அதனை இங்கும் நடைமுறைப்படுத்த விஷால் முன் உதாரணமாக இருக்க வேண்டும்,” என்றார் செல்வமணி.