நேபாளம் : நடிகை மனீஷா கொய்ராலா நேபாள நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்து வருகிறார்.
‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘பாபா’ உட்பட பல படங்களில் நடித்தவர் மனீஷா கொய்ராலா. 50 இந்திப் படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தற்போது ‘டியர் மாயா’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கருப்பைப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
மனீஷா கொய்ராலா ஐ.நா.சபையின் ‘மக்கள்தொகை நிதியம்’ எனும் அமைப்பில் இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் களத்தில் இறங்கி உதவிகளைச் செய்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்படுத்தித் தருவது போன்ற அத்தியாவசிய உதவிகளைச் செய்து வருகிறார்.
ஒரு பெரிய நடிகை, அதுவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மக்களோடு மக்களாக உதவி செய்வதை நேபாள மக்கள் ஆச்சரியமாகப் பார்த்து வருகிறார்கள். நேபாளம் மனீஷா கொய்ராலா பிறந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.