அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என “விவேகம்” அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகளை வெடிக்கச்செய்து ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிடுகிறது. அதனைத் தடுக்க செர்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை (உளவுப் படை?) ஒன்று களமிறங்குகிறது.
அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள்.
இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட நண்பர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்களை முறியடித்து எப்படி அணுகுண்டை அஜய்குமார் செயலிழக்கச் செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் அறிமுகமாவதைப் போல ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியில் அறிமுகமாகிறார் அஜீத்குமார். ஒரே ஒரு வித்தியாசம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த சண்டை எதற்காக, யாருடன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பது தெளிவாகப் புரியும். விவேகத்தில் கண்ணைக் கட்டி பனிக் காட்டிற்குள் விட்டதைப் போல இருக்கிறது.
சரி, துவக்கம்தான் இப்படி, படம் வேறு மாதிரி இருக்கும் என்று காத்திருந்தால் அதிலும் ஏமாற்றம். படம் துவங்கியதிலிருந்து முடிவதுவரை தொடர்ந்து யாராவது யாரையாவது சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
எந்த நாட்டின் உளவு முறியடிப்பு அல்லது பயங்கரவாத முறியடிப்புப் படை அணுகுண்டை செயலிழக்கச்செய்யும் பணியில் இறங்குகிறது? அந்த நாட்டில் அரசு என்ற ஒன்றே இருக்காதா?
20, 30 பேர் சேர்ந்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அஜீத் மேல் ஒரு குண்டுகூட படுவதில்லை. மிகப் பெரிய அணைக்கட்டிலிருந்து கீழே குதிக்கும் அஜீத், கீழே விழுந்துகொண்டிருக்கும்போது துப்பாக்கியை எடுத்துச் சுட்டு நான்கைந்து பேரைக் கொன்றுவிடுகிறார்.
வில்லனாக வரும் விவேக் ஓபராய் ரொம்பவும் பாவம். படம் முழுக்க, அஜீத்தைப் பற்றி பஞ்ச் வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்க வேண்டிய வேலை.
“ஒரு வழி இருந்தாலே அவன் ஆடுவான். அறுபது வழி இருக்கு அடங்கவே மாட்டான்”, “அஜய்குமார் உங்க பார்வையில் படக்கூடாது என்று முடிவுபண்ணீட்டா, அவன் நிழலைக்கூட உங்களால நெருங்க முடியாது”, “போராடாம அவன் போகவும் மாட்டான், சாகவும் மாட்டான்” – இதெல்லாம் வில்லன் அஜீத்திற்காக சொல்லும் பஞ்ச் வசனங்கள். இது தவிர, அஜீத் கேமராவைப் பார்த்து பேசும் பஞ்ச் வசனங்கள் தனி.
ஒரு படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாலும் ஆக்ஷன் காட்சிகளாலும் நிறைந்திருப்பது பிரச்சனையில்லை. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வகை திரைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், அந்த சண்டையும் ஆக்ஷனும் யார் – யாருக்கிடையில், எதற்காக நடக்கின்றன என்பதில் ஒரு தெளிவு இருக்கும். இந்தப் படத்தில் அந்தத் தெளிவு இல்லை.
படம் நெடுக, இடத்தின் பெயர், நேரம் போன்றவற்றை எழுத்தில் காண்பிக்கிறார்கள். ஆங்கிலத்தில் வரும் அந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன்பாக அவை நீங்கிவிடுகின்றன. படம் பார்ப்பவர்கள் படித்துவிடக்கூடாது என்றால் அதை எதற்காக காண்பிக்க வேண்டும்?
ஆக்ஷன் படம் என்பதால், அஜீத்திற்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பேயில்லை. அஜீத்தின் மனைவியாக வரும் காஜல் அகர்வாலின் நடிப்பில் சொல்வதற்கு ஏதும் இல்லை. இரண்டு மூன்று காட்சிகளில் வந்துவிட்டுச் செத்துப் போகிறார் அக்ஸரா ஹாசன். மொழிபெயர்ப்பாளராக வரும் கருணாகரன், சில காட்சிகளுக்குப் பிறகு காணாமல்போய்விடுகிறார்.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அஜீத் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டுமே படத்தின் நினைவாக எஞ்சக்கூடும். -BBC_Tamil
விமர்சகரே வணக்கம்.
20, 30 பேர் சேர்ந்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டாலும் ஒரு குண்டுகூட படாமல் தப்பிப்பதும், 50-60 பேர்களை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்துவதும், தன்னை நோக்கி பாய்ந்து வரும் தோட்டாவை பல்லால் கடித்து துப்புவதும், எதிரியே முகம் சுளிக்கும் வண்ணம் பஞ்ச் வசனம் பேசுவதும், 500-அடி உயரத்தில் இருந்து அடிபடாமல் குதிப்பதும் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இப்போது ரஜினி,கமல், அஜித், விஜய், சூரிய, விக்ரம் என்று தற்போது தனுஷ் வரைப் போய்க்கொண்டிருக்கிறது. ஏதோ இந்தப் படத்தின் ஹீரோ மட்டும் தான் இப்படியெல்லாம் சாகசம் பண்ணுவதாக விமர்சனப்படுத்திருக்கிறீரே? ஒருவேளை நீங்கள் பார்த்த முதல் தமிழ்ப்படம் இதுவா?
நீங்கள் பொரிந்து தள்ளிய விமரசனத்தைப் படிக்கும்போது நது இந்தப் படத்தின் விமர்சனம் மாதிரி தெரியவில்லை. மாறாக, அஜித் என்ற தனிமனிதனை (றிந்தப் படத்தின் ஹீரோ) பிடிக்காத காழ்ப்புணர்ச்சியால் எடுத்த பித்த வாந்தி போல் அல்லவா இருக்கிறது? கோடி கோடியாக பணம் போட்டு தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை விமர்சனம் என்ற பெயரில் 20-30- வரிகளில் இப்படித் துப்பலாமா? விமர்சனத்துக்கு ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இருக்க வேண்டாமா?
விமர்சனம் படித்தவுடன் படம் பார்க்கும் ஆசையில் பாதி போய்விட்டது உண்மைதான், இருந்தாலும் விமர்சகர் இன்னும் கொஞ்சம் தெளிவாய் எழுதியிருந்தால் , நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாய் குழம்புவதிலிருந்து தப்பித்திருக்கலாம்தான் என்ன செய்வது, காலக் கொடுமை, அது யாருங்க அஜய்குமார், அஜய்குமார்னு அடிக்கடி சொல்றீங்க, படத்தில் தல யின் பெயர் அதுவா ? இல்ல எங்களை இன்னும் அதிகமா குழப்ப நீங்க கண்டுபிடிச்ச புதுப்பெயரா ?
விமர்சனம் அவரவர் பார்வையின் நோக்கில் எழுதப்படுவது. இதில் மனம் குழம்ப எதுவும் இல்லை. நம் பார்வை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே…
நானும் படத்தைப் பார்த்தேன் , விமர்சனைத்தைப் போல படத்தில் அஜீத் சண்டைக்காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு உழைத்திருக்க்கின்றார் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அத்தனை சண்டைக்காட்சிகளுமே அஜீத்தை ஒரு சுப்பர் ஹீரோவாக காட்ட முற்படுத்தப்படுகிறதே தவிர நிஜ ஹீரோவாக காட்டவில்லை . நம்பமுடியாத சண்டைக்காட்சிகளை அதிக பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள். ரசிக்கமுடியாமல் சில காட்சிகளில் எரிச்சல் தான் வருகிறது. கஜோலின் நடிப்பு ஓகே. கதைக்கு ஒட்டி வராத தமிழ் செண்டிமெண்ட் கொஞ்சம் உண்டு. வெளியில் வரும் பொழுது எதோ ஒரு fantacy படத்தை பார்த்தது போன்ற உணர்வு. இது போன்ற படங்களை வைத்து தமிழ் ரசிகர்களை இனி ஏமாற்றுவது சிறிது கடினம் என்றே எனக்கு தோன்றுகிறது.