அனிதா குடும்பத்தினருக்கு லாரன்ஸ் செய்த உதவி என்ன தெரியுமா?

raghava-lawrenceசென்னை : நீட் தேர்வால் மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவர் ப்ளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அனிதா தற்கொலை திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

தமிழ்த் திரையுலக இயக்குனர்கள் பலர் அரியலூருக்குச் சென்று அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். திரையுலகினர் சார்பில் அஞ்சலி கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு அறிவித்த ரூபாய் 7 லட்சம் நிதியை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அனிதா குடும்பத்துக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகைக்கான காசோலையை லாரன்ஸின் உதவியாளர்கள் அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்கள். இதை வெளியில் தெரிவிக்கவேண்டாம் என லாரன்ஸ் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

tamil.filmibeat.com