டெங்கு: தமிழக அரசை எதிர்பார்க்காமல் மக்களே களத்தில் குதிக்க நடிகர் மயில்சாமி அழைப்பு

சென்னை: டெங்கு காய்ச்சலை தடுக்க அரசை எதிர்பார்க்காமல் மக்களே களத்தில் இறங்க வேண்டும் என்று நடிகர் மயில்சாமி கேட்டுக் கொண்டார்.

டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் தினந்தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். டெங்குவை தடுப்பதற்காகவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.

எனினும் ஆங்காங்கே உயிரிழப்புகள் அதிகமாகின்றன. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்குவோ என்று அச்சம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை நடிகர் மயில் சாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று மட்டும் டெங்குவுக்கு 9 பேர் உயிரிழந்து விட்டனர்.

இது மிகவும் மனவேதனையை அளிக்கிறது. இதனால் அரசை எதிர்பார்க்காமல் மக்கள் அனைவரும் நிலவேம்பு குடிநீரை குடித்துவிட்டு பிற மக்களுக்கும் வழங்க வேண்டும். நமது வலிக்கு நாம்தான் வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டும். நோயை தடுக்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

மயிலாப்பூரில் மக்கள் கூடும் இடங்களிலும், வீடு வீடாகவும் சென்று நடிகர் மயில்சாமியும் அவரது நண்பர்களும் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

tamil.oneindia.com