சென்னை: மெர்சல் படத்தில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள வசனங்களை நீக்க தயாரிப்பாளர் சம்மதித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் கதை, காட்சியமைப்புகள் ஒன்றும் புதிதில்லை என்றாலும், விஜய்யின் நடிப்பு மற்றும் சுவாரஸ்யமான காட்சி நகர்வுகள் பார்ப்பவர்களை போரடிக்காமல் வைத்திருக்கிறது.
அரசு ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தரவில்லை என்ற கேள்வி, பண மதிப்பிழப்பால் நாட்டு மக்கள் பட்ட, படும் அவதிகளை வடிவேலு மூலம் சொல்லும் காட்சி,ட ஜிஎஸ்டி வரி திணிப்பால் மக்கள் படும் கஷ்டங்களை விஜய் மூலம் சொல்ல வைத்தது போன்றவை இந்தப் படத்தின் குறைகளை மன்னிக்க வைத்தன.
ஆனால் மத்திய பாஜக அரசு இந்தக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, தனது அடிமட்டத் தலைவர்களான தமிழிசை, எச் ராஜா, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மூலம்.
இதற்குப் பணிந்து அந்தக் காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டுள்ளார் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி.
மக்கள் மெர்சலைப் பாராட்டியதே அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய அந்த காட்சிகளுக்காகத்தான். இப்போது அவற்றையும் நீக்கச் சொன்னால் எப்படி?
சரி, படத்திலிருந்து அக்காட்சிகளை நீக்கிவிடலாம். ஆனால் ஏற்கெனவே இணைய தளங்களில் ஹெச்டி தரத்தில் வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் உள்ளதே… அவற்றை என்ன செய்வீர்கள்?