கமல் சார், உங்களை கட்சி தொடங்க சொல்லி உந்துவது யார்?

சென்னை: ஊடகங்களின் உந்துதலுக்கெல்லாம் கட்சியை அறிவிக்க முடியாது என கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். உண்மையிலேயே ஊடகங்கள்தான் கமல்ஹாசனை கட்சி தொடங்க உந்துகின்றனவா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார் கமல்ஹாசன். அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதே அவர்தான்.

இதே கேள்வியை நிருபர்கள் அவரிடம் கேட்டால், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று பதிலளித்து குழப்பிவிட்டார். அப்படியும் விடாத நிருபர்கள் தேர்தல் அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டபோது, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் உள்ளது, வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்பதை தெளிவாக கூறினார் கமல்.

100 நாளில் ரெடி என்றார்

அரசியல் தொடர்பான மற்றொரு கேள்விக்கு, தேர்தல் அறிவித்தால் 100 நாட்களுக்குள் கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திக்கவும் தான், தயாராக உள்ளதாக கூறியிருந்தார் கமல்ஹாசன்.

முக்கிய அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் தீவிர அரசியல் பிரவேசம் எப்போது என கேள்வி எழுந்துள்ள சூழலில், வரும் நவம்பர் 7 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் இதனை குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

இணைந்து செயல்பட கோரிக்கை

தமிழகத்திற்கு செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும், பல்வேறு இயக்கங்கள் தம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் கமல்.

கட்சி தொடங்கவில்லையாம்

அவரது பழைய பேட்டிகள் நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்து பார்த்தால், நவம்பர் 7ம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்பது போன்ற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். இந்த எண்ணத்தையே ஊடகங்கள் வெளிப்படுத்தின. ஆனால், “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” என்று டிவிட் செய்துள்ளார் கமல்.

இப்போதைக்கு இல்லையோ

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதை போல உள்ளது இந்த கருத்து. ஊடகங்கள் கண்ணாடியை போன்றவை. எதிரே என்ன இருக்கிறதோ அதை பிரதிபலித்து காட்டும். ஆனால் கண்ணாடிதான், செயலை நிர்ணயிப்பதை போல கமல் கூறியுள்ள இந்த கருத்தை வைத்து பார்த்தால், கட்சி தொடங்கும் எண்ணம் கமலுக்கு இப்போதைக்கு இல்லை என்பதை போலவே தெரிகிறது.

tamil.oneindia.com